தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் உள்நோக்கம் கொண்ட சட்ட விரோத மேட்டூர் அணை சரபங்கா திட்டத்திற்கு கடந்த அஇஅதிமுக ஆட்சிகாலத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

மேச்சேரி மற்றும் நங்கவள்ளி ஆகிய இரண்டு குழாய் வழி பாதைகள் மூலம் கொண்டு போவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி பெறாமல் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கும் முரணாக இத்தத் திட்டத்தை செயல்படுத்த முனைவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆணையத்திடம் புகார் மனு அளித்து வலியுறுத்தி உள்ளோம். இது குறித்து விவாதிப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் எடுத்த முடிவை திமுக தலைமையிலான அரசு நிறுத்தி வைத்துள்ளது. மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கையும் காலதாமதப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது. 



 

சரப்பங்கா திட்டத்தில் முதல் கட்ட பணி மேச்சேரி வழியாக தண்ணீரை கொண்டு செல்வதற்கான முதல் கட்ட குழாய் வழிபாதை அமைக்கும் பணி 2022ல் ரூபாய் 562 கோடி மதிப்பீட்டில் முடிவு பெற்றுள்ளது. 

 

இரண்டாவது நீர் வழிப்பாதை நங்கவள்ளி வழியாக கொண்டு செல்வதற்கு கூடுதலாக சுமார ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஒதுக்கீடு செய்து நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணைகளை கடந்த 27 ஆம் தேதி திமுக அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக திமுக எதிர்கட்சியாக இருக்கிறபோது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எ கே எஸ் விஜயன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் கட்ட பணியை விரைவுபடுத்தி முடிப்பதற்கு துணை போன திமுக அரசு, இரண்டாவது கட்ட பணிக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தி இரண்டாவது வழி பாதையை நங்கவள்ளி வழியாக துவக்குவதற்கு அரசாணைகளை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. 

 

இந்த திட்டம் நிறைவேற்றப்படுமேயானால் ஒட்டுமொத்தமாக காவிரி டெல்டா பேரழிவை சந்திக்கும். மேட்டூர் அணையில் 80 அடி தண்ணீர் நிரம்புகிற நிலையில் அணையில் இருந்து சரபங்கா உபரிநீர் திட்டம் என்கிற பெயரில் அணையை உடைத்து பாசனநீரை இராட்சச இயந்திரங்களைக் கொண்டு இறவை பாசனம் மூலம் கொண்டு செல்வதற்காக கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டம் சட்டவிரோதமானது என்று அறிந்திருக்கிற திமுக அரசு தற்போது காவிரி டெல்டாவை எப்படியும் அழித்துவிட வேண்டும் என்று செயல்படுகிறது.

 

ஒரு பக்கம் கர்நாடகம் தண்ணீர் தர மறுத்து வஞ்சக நடவடிக்கையில் ஈடுபட்டதால் குருவை கருகத் தொடங்கி இருக்கிறது. சம்பா இந்த ஆண்டு சாகுபடி துவங்க முடியாத நிலையில் பரிதவிக்கிறார்கள். தற்போது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் மேலாண்மை ஆணையம் அனுமதி இல்லாமல் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு முரணாக போடப்படுகிற சரப்பங்கா திட்டத்தை நிறைவேற்றுவதற்கு திமுக அரசு முன்வருவது விவசாயிகளுக்கு பெரும் துரோகம் இழைப்பதாகும். குறிப்பாக இந்த திட்டத்தை ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக எதிர்த்து விட்டு தற்போது ஒப்பந்தக்காரர் நலனை முன்னிறுத்தி துணை போவதும், டெல்டா விவசாயிகளை அழிக்க நினைப்பது எந்த வகையில் நியாயம்? இது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

 

சேலம் விவசாயிகள் நலனுக்காக இத்திட்ட நிறைவேற்றப்படுமே ஆனால் 16 கண் மதத்திற்கு கீழே வெளியேறும் தண்ணீரை தடுத்து திட்டத்திற்கு இரவு பாசனங்களும் மேற்கொள்வது உண்மையான உபரி நீர் திட்டமாகும் என்பதை முதல்வர் உணர வேண்டும். இது குறித்து மேட்டூர் அணையில் இருந்து நீர் பாசன துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு நேரடியாக விளக்கம் அளித்துள்ளோம். எனவே இத்திட்டத்திற்கான அரசாணைகள் முழுமையும் ரத்து செய்யப்பட்டு திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். இல்லையேல் தீவிர போராட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக களமிறங்குவோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.