முத்துப்பேட்டை அருகே தண்ணீர் இல்லாமல் பத்தாயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் கருகும் அபாயம். குடம் மூலமாக தண்ணீர் எடுத்து விவசாயிகள் வயலுக்கு தண்ணீர் தெளிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை
திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 130 ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் நேரடி விதைப்பில் 62,000 ஏக்கர் பரப்பளவிலும் நடவுப் பணிகளில் ஒரு லட்சத்து ஆயிரத்து 130 ஏக்கர் பரப்பளவிலும் விவசாயிகள் தற்பொழுது தங்களது நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை 80 ஆயிரம் ஏக்கர் ஆற்று நீர் பாசனத்தை நம்பியும் 93 ஆயிரம் ஏக்கர் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் தற்பொழுது நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் குருவை நெல் சாகுபடிகள் தண்ணீரில் இல்லாமல் கருகி வருகிறது.
கருகிய பயிர்கள்
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 74 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடியும் 20000 ஏக்கர் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு, உப்பூர், தில்லைவிலாகம், இடும்பாவனம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கர் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பகுதி விவசாயிகளுக்கு கோரையாறு மூலமாக பாசனத்தை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியான முத்துப்பேட்டை பகுதிக்கு ஒரு மாதத்திற்கு பின்பு தான் வந்து சேர்ந்தது. வந்த தண்ணீரும் ஆற்றில் தரையோடு தரையாக சென்றதால் குறுவை நெல் பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டன இதனால் விவசாயிகள் டிராக்டரை விட்டு உழவு அடித்து விட்டு மீண்டும் சம்பா நெல் சாகுபடி பணிகளை தொடங்கினர்.
குடம் தண்ணீரில் பாசனம்
இந்த நிலையில் சம்பா நெல் பயிர்கள் நேரடி விதைப்பு பணிகளாக இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதால் ஆற்றில் இருந்து பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் ஆலங்காடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10,000 ஏக்கர் நெல் பயிர்கள் கருகும் நிலைக்கு உருவாகியுள்ளது.
இந்த நிலையில் விவசாயிகள் குடத்தின் மூலமாக ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து தெளித்து வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நேரடியாக சென்று ஆய்வு செய்து முறை வைக்காமல் தண்ணீரை திறந்து விடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் இல்லை என்றால் ஒரு ஏக்கருக்கு இதுவரை பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து முற்றிலுமாக விவசாயிகள் பாதிக்க கூடிய சூழல் உருவாகி உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.