21 மாத கால நிலுவை ஓய்வூதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் படி அடையாள அட்டை மற்றும் ஓய்வூதியர் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் நடந்த தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க 4வது, மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.


இதையொட்டி பேருந்து நிலையத்தில் இருந்து ஓய்வூதியர்கள் உரிமைப் பேரணி வட்டப் பொருளாளர் பெருமாள் தலைமையில் நடந்தது. பின்னர் சங்கக் கொடியேற்றி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டத் தலைவர்  கலியமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோவிந்தராசு அஞ்சலி தீர்மானம் வாசித்தார். பூதலூர் வட்டச் செயலாளர் கே.சுப்பிரமணியன் வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தொடக்கவுரையாற்றினார்.

 





ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் இராஜகோபாலன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் ஜி.பூபதி நிதிநிலை அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர்  கோதண்டபாணி, அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு  மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் பலர்  பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: "மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கியுள்ளது போல, தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் ஜனவரி 2022 முதல் 3 விழுக்காடு அகவிலைப்படியை முன்தேதியிட்டு ரொக்கமாக உடன் வழங்க வேண்டும்.  ஓய்வூதியர்களின் மஸ்டரிங் வேலையை 20 விழுக்காடு மட்டுமே அரசு கருவூலம் செய்வது என்பதும், மீதி 80 விழுக்காட்டை அஞ்சல் துறை மற்றும் தன்னார்வ நிறுவனங்கள், சேவை நிறுவனங்களிடம் விட்டு விடுவது ஆள் குறைப்பு நடவடிக்கை ஆகும். எனவே, மஸ்டரிங் முறை முழுவதையும் கருவூலமே எடுத்துச் செய்ய வேண்டும்.

 

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தவாறு, 70 வயது நிறைவுற்ற ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.  பூதலூரில் சார்நிலை கருவூலம் அமைக்க வேண்டும். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு குடும்பப் பாதுகாப்பு நிதி ரூபாய் ஒரு லட்சம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் இறந்தவுடன் இறுதிச் சடங்கு செலவினங்களுக்காக ரூ.25 ஆயிரத்தை அன்றே வழங்கவும், அதனை குடும்பப் பாதுகாப்பு நிதியில் ஈடு செய்யவும் உரிய அரசாணை வழங்க வேண்டும்.

 



21 மாத கால நிலுவை ஓய்வூதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் படி அடையாள அட்டை மற்றும் ஓய்வூதியர் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும். ரயில் பயணங்களில் ஓய்வூதியர்கள் உள்ளிட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் கட்டணச் சலுகை இட ஒதுக்கீட்டு சலுகைகள் வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

தொடர்ந்து மாநாட்டில் மாவட்டத் தலைவராக கலியமூர்த்தி, மாவட்டச் செயலாளராக தமிழ்மணி, மாவட்டப் பொருளாளராக கோவிந்தராஜ், மாவட்டத் துணைத் தலைவர்களாக பூபதி, பழ.அன்புமணி, பால்ராஜ், மாவட்ட இணைச் செயலாளர்களாக பாலசுப்பிரமணியன், வெங்கடேசன், பிச்சைமுத்து மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், தணிக்கையாளர்கள் உட்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநிலச் செயலாளர்  இரா.மனோகரன் நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தாமரைச் செல்வன் நன்றி கூறினார்.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண