திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட வடக்கு வீதியில் வசித்து வருபவர் குஞ்சப்பா. 34 வயதான இவர் டீக்கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 33 வயதான தமயந்தி. இவர்களது மூத்த மகன் 10 வயதான பவின் திருவாரூர் எஸ் எஸ் உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். பவினின் தங்கை தர்ஷிகா அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். பவின் பிறந்தது முதல் செவி திறன் குறைபாடு உள்ளவராக உள்ளார். தற்போது அவர் கருவி பொருத்தப்பட்டு காது கேட்பதாகவும், பேச்சு பயிற்சிக்கு சென்று வருவதாகவும் அவரது தாய் தமயந்தி தெரிவிக்கிறார். இந்த நிலையில் பவின் படிக்கும் எஸ் எஸ் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பவினை சக மாணவர்களுடன் உட்கார வைக்காமல் தனியாக உட்கார வைப்பதாகவும், செவிதிறன் குறைபாடு உள்ளவர்களுக்கான பள்ளியில் அவனை சேர்க்கும்படி நிர்பந்திப்பதாகவும், மேலும் அதே பள்ளியில் படிக்கும் அவனது தங்கை தர்ஷிகாவிற்கும் சேர்த்து மாற்று சான்றிதழ் வாங்கி வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் நிர்பந்திப்பதாகவும் கூறி பவனின் தாய் தமயந்தி கண்ணீரும் கம்பலையுமாக தனது மூன்றாவது மகனை இடுப்பில் வைத்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.




இதுகுறித்து தமயந்தி கூறுகையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் எனது மகன் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் ஆகையால் சக மாணவர்களுடன் படிக்கும்படி சாதாரண பள்ளியில் சேர்த்து விடுமாறு அறிவுறுத்தியதால்தான் இப்பள்ளியில் சேர்த்து விட்டேன் எனவும், ஆனால் பள்ளி நிர்வாகம் தொடர்ந்து அவனை செவிதிறன் குறைபாடு உள்ளவர்களுக்கான பள்ளியில் சேர்க்குமாறு நிர்பந்திப்பதாகவும் சக மாணவர்களுடன் அமர விடாமல் தனியாக உட்கார வைத்து அவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார். இதன் காரணமாக நல்ல நிலையில் உள்ள எனது மகள் தர்ஷிகாவையும் மாற்று சான்றிதழ் வாங்கி வேறு பள்ளியில் சேர்க்குமாறு நிர்வாகம் வலியுறுத்துவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் முறையிடுவதற்காக வந்ததாக கூறினார்.




இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரத்தை சந்தித்த தமயந்தி இதுகுறித்து எடுத்து கூறினார். உடனே மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டறிந்தார். இது போன்ற மாணவர்களை முதல் பெஞ்சில் அமர வைத்து நன்றாக பயிற்றுவிக்கும்படி பள்ளிக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீண்டும் அந்த பள்ளியிலேயே அந்த மாணவன் படிக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார். இதனை எடுத்து அவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வருவாய் அலுவலர் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, பவனின் தங்கை தர்ஷிகாவிற்கு அழுதால் வலிப்பு வருவதாகவும் அதன் காரணமாகவே அவ்வாறு கூறியதாகவும் தற்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அறிவுறுத்தலின்படி மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். கண்ணீருடன் தாய் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அழுது புலம்பியது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்ததுடன் காண்போர் நெஞ்சங்களை கணக்க வைத்தது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண