தஞ்சாவூரில் மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றி தருவதற்கு விண்ணப்பம் செய்தவரிடம் ரூ.4 ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கிய மின் கணக்கீட்டாளரை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மின்வாரியம் என்றாலே ஷாக்தான் என்பது போல் சிறிதளவு கூட அச்சமின்றி லஞ்சம் வாங்கிய போது இந்த பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் விளார் சாலை நாவலர் நகர் 2வது தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மனோகரன் (39). இவரது மனைவியின் அக்கா பத்மினி. இவர் தான் வாங்கிய வீட்டில் உள்ள 3 மின் இணைப்புகளை பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்தார். இந்த பெயர் மாற்றத்திற்காக ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார்.
பெயர் மாற்றத்திற்கு உரிய பணத்தை செலுத்திய பின்னர் அதற்குரிய பணம், ஆவணங்களான வீட்டை விலைக்கு வாங்கிய பத்திரம், சொத்து வரி நகலுடன் பத்மினிக்காக அவரது தங்கை கணவர் மனோகரன் தஞ்சாவூர் மேற்கு உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கு பணியாற்றும் கணக்கீட்டாளர் தேன்மொழி என்பவரை அணுகி மனோகரன் பெயர் மாற்றம் செய்வதற்குரிய விபரங்களை தெரிவித்துள்ளார்.
அப்போது, ஒரு இணைப்புக்கு ரூ. 1,500 வீதம் மூன்று இணைப்புகளுக்கு ரூ. 4,500 தருமாறு மனோகரனிடம் தேன்மொழி லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் அதை கொடுக்க மனோகரன் விரும்பவில்லை. இதனால் அவரை தேன்மொழி அலைக்கழித்துள்ளார். இதையடுத்து லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத மனோகரன் தஞ்சை ஊழல் தடுப்பு போலீசாரிடம் இதுகுறித்து புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சில ஆலோசனைகள் வழங்கி உள்ளனர். அதன்படி தேன்மொழியை சந்தித்து பெயர் மாற்றம் செய்ய நீங்கள் கேட்ட பணத்தை தருகிறேன் என்று மனோகரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரூ. 4500 ஐ மனோகரன் தேன்மொழியிடம் கொடுத்துள்ளார். நாம கேட்ட பணம் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் பணத்தை தேன்மொழி எண்ணி பார்த்தபோது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக தேன்மொழியை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்