எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், அவர்களின் உடமைகள் பறிக்கப்படுவதும், எல்லாவற்றுக்கு மேலாக துப்பாக்கி சூடு களுக்கும் ஆளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்தேறி வருகிறது. இதனை தடுக்க இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கைது செய்யப்படும் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களின் வாழ்வாதாரமான படகுகள் விடுவிக்கப்படாமல் இலங்கை துறைமுகங்களிலேயே கட்டப்பட்டு பாழாகி வருகின்றது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு பகுதியை சேர்ந்த வடமலை என்பவரின் மகன் 57 வயதான வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படைகில், அதே பகுதியை சேர்ந்த 52 வயதான கணேசன் , 22 வயதான பிரேம்குமார், காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த 42 வயதான தருமன், 31 வயதான இளையராஜா, ராமன் உள்ளிட்ட 5பேரும், இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் சின்னங்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த 27 வயதான வீரா மற்றும் 27 வயதான தினேஷ், தரங்கம்பாடியை சேர்ந்த 45 வயதான ராமநாதன், 22 வயதான விக்னேஷ், 25 வயதான ஜெகதீஸ் மற்றும் 27 வயதான சந்தீஸ் குமார் , நாயக்கர் குப்பம் பாக்கியராஜ் ஆகிய 12 மீனவர்களுக்கு ஒரே படகில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
இவர்கள் வேதாரண்யம் பகுதியில் தென்கிழக்கில் இந்திய கடல் எல்லையில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை பருத்தித்துறை துறை முகத்தில் இருந்து 40 நாட்டிகல் மையில் தொலைவில் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள் என மொத்தம் 12 மீனவர்களை கைது செய்தனர்.
தொடர்ந்து மீனவர்களின் படகு மற்றும் மீன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, மீனவர்களை இலங்கை நீதிமன்றம் ஆஜர்படுத்தினர். அதனை அடுத்து நீதிமன்றத்தில் 8 -ம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தவிட்டதை தொடர்ந்து 12 மீனவர்களை இலங்கை சிறையில் அடைத்தனர். இதுகுறித்து மீனவ பஞ்சாயத்தார் கூறுகையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க புதுச்சேரி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.