தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமில் பரிசோதனை மேற்கொண்ட 5 பெண்களுக்கு ஆரம்ப கட்ட கர்ப்பவாய் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மயிலாடுதுறையை அடுத்த உளுத்துக்குப்பை கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமில் கர்ப்பவாய் பரிசோதனை செய்து கொண்ட 26 பெண்களில் 5 பெண்களுக்கு ஆரம்ப நிலை கர்ப்பவாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். கர்ப்பவாய் பரிசோதனை செய்து கொண்ட 26 பெண்களில் 5 பெண்களுக்கு ஆரம்ப நிலை கர்ப்பவாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.




கடந்த  2006 -ஆம் ஆண்டு டிசம்பர் 30 -ஆம் நாள் அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதியால் முற்போக்கான மருத்துவத் திட்டமான 'வருமுன் காப்போம்' திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் மருத்துவப் பயன் பெற்றனர். அதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்தால் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் திமுக அரசால் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களுக்கு மூடுவிழா நடந்தது. அதில் 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்துக்கும் மூடு விழா கண்டது. பின்னர் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைத்ததை அடுத்து கடந்த 2021 மே 7 -ஆம் தேதிக்குப் பிறகு முதல்வர் 'வருமுன் காப்போம்' திட்டத்தை முன்பு இருந்ததைவிட, கூடுதலான வசதிகளுடன், கூடுதலான மருத்துவ உபகரணங்களுடன் ஆண்டுக்கு 1,000 மருத்துவ முகாம்கள் வீதம் தொடங்கிட வேண்டுமென்று நிதிநிலை அறிக்கையிலே அறிவிக்கப்பட்ட 110 அறிவிப்புகளில் இதையும் அறிவித்தார்.




இந்தியா முழுவதும் பெரிதும் பாராட்டப்பட்ட அத்திட்டத்துக்கு இப்போது கூடுதலான தேவைகள் இருப்பதால் ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிட்டு, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 2021 செப்டம்பர் 29 -ம் தேதி அன்று 'கலைஞரின் வருமுன் காப்போம்' முதல்வரால் மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இம்மருத்துவ முகாம்களில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நலம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், காது, மூக்கு, தொண்டை, கால்மூட்டு, இருதய சிகிச்சை, கண் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், சித்த மருத்துவம், நரம்பியல் மருத்துவம் மற்றும் முதியோருக்கான மருத்துவம் போன்ற பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.




பரிசோதனை என்கிற வகையில், ரத்தப் பரிசோதனை, ரத்த உறைதல் பரிசோதனை, ரத்தத்தில் கொழுப்புப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சளி பரிசோதனை, மலம் பரிசோதனை, கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவர்களுக்கு மேல் சிகிச்சைகள் பரிந்துரை செய்வோருக்கு, உயர் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ்  மயிலாடுதுறையை அடுத்த ஊத்துக்குப்பை கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமில்  நடைபெற்றது. முகாமை மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தொடக்கி வைத்து பார்வையிட்டார்.




முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தனர். இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இசிஜி பெண்களுக்கான கர்ப்பவாய் புற்றுநோய் பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் கர்ப்பவாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொண்ட 26 பெண்களில் 5 பெண்களுக்கு புற்றுநோயின் ஆரம்பகட்ட பாதிப்புகள் தென்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து பாதிப்பு கண்டறியப்பட்ட பெண்கள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் செல்வமணி ஒன்றிய செயலாளர் முருக மணி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.