தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு தனி ஆலயம் அமைந்துள்ள தலமாகவும் பழம்பெரும் தமிழ்க்கவி ஒட்டக்கூத்தர் பிறந்த ஊராகவும் மேலும் தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் ஒட்டக்கூத்தரின் தமிழ் புலமையை பாராட்டி இந்த கிராமத்தை அவருக்கு பரிசாக அளித்த காரணத்தினால் இந்த ஊருக்கு கூத்தனது ஊர் கூத்தனூர் என பெயர் பெற்றதாகவும் கூறப்படும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பூந்தோட்டம் அருகில் அமைந்துள்ள கூத்தனூர் மகா சரஸ்வதி அம்மன் ஆலயத்தின் ஸ்ரீ சாரதா நவராத்திரி மகோத்சவ திருவிழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த விழாவின் ஒன்பதாவது நாள் உற்சவமாக சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த ஆலயத்தில் அமைந்துள்ள மகா சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெண் பட்டாடை உடுத்தி சரஸ்வதி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சரஸ்வதி அம்மனின் பாத தரிசனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.சரஸ்வதி பூஜையை இந்த ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் காலை முதலே வருகை தந்து வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



 

குறிப்பாக பேனா நோட்டு புத்தகங்கள்  போன்றவற்றை வாங்கிச் சென்று மாணவ மாணவிகள் இந்த ஆலயத்தில் சரஸ்வதி அம்மனுக்கு வைத்து வழிபாடு நடத்துவதன் மூலம் நல்ல கல்வி செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகள் நோட்டு புத்தகங்கள் பேனா முதலியவற்றை வைத்து இங்கு வழிபாடு நடத்தி வருகின்றனர். சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த ஆலயத்தில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.ஆலய நிர்வாகத்தின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

கோயிலின் சிறப்புகள்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டம் அடுத்து கூத்தனூர் என்னும் ஊரில் கல்வித்தெய்வமாம் சரஸ்வதி தேவிக்கு, தென்னிந்தியாவிலயே  தனியாக அமையப்பெற்ற ஒரே கோவில் இந்த மகா சரஸ்வதி அம்மன் கோவில். வீரத்திற்கு பெயர் போன சீக்கியர்களும், பஞ்சாபியர்களும் வாழும் வட இந்தியாவில் அன்னை கொல்கத்தாவில் காளியாகவும், செல்வத்தின் இருப்பிடமான மும்பையில் மகாலட்சுமியாகவும், கலைகள் செழித்தோங்கும் தென்னிந்தியாவில் கூத்தனூரில் சரஸ்வதி ஆகவும் நின்று காட்சி புரிகிறார். பழம்பெரும் தமிழ்க்கவி ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் இந்த கூத்தனூர். மேலும் தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழன் இக்கவியின் தமிழ்ப்புலமையை பாராட்டி இக்கிராமத்தை பரிசாக அளித்தார். எனவே இக்கிராமம் கூத்தனது ஊர் என்று பொருள் பட கூத்தனூர் என்றும் கூறுவர்.



 

விஜயதசமி, இக்கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு மிக முக்கியமான விழா. தேர்வுக்குச் செல்லும் பள்ளி மாணவ மாணவிகள்  வெற்றி பெறவும் மற்றும் பள்ளி சேர்க்கைக்கு முன்னர் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும் கல்விக்கடவுளாம் இச்சரஸ்வதி அம்மனை வழிபட்டு பயனடைகின்றனர். இக்கோயில் முன்புறம் மூன்று நிலை ராஜகோபுரத்தினைக் கொண்டுள்ளது. முன் மண்டபம் வேலைப்பாடுகளுடன் உள்ளது. அலங்கார மண்டபம் முகப்பில் அம்பாள் சுதை உள்ளது. கர்ப்பகிரக விமானம் கர்ண கூடுகள், அந்த்ராளம் உள்ள மாறுபட்ட விமானமாகும். இரண்டு பிற்காலக் கல்வெட்டுகள் மட்டும் உள்ளன. இத்தலத்தின் மூலவராக சரஸ்வதி காணப்படுகிறார். வெண்ணிற ஆடையில், வெண் தாமரையில் பத்மாசனத்தில், வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கி அமர்ந்திருக்கிறார். இத்தளத்தில் ஒட்டக்கூத்தர் வழிபட்டு அம்பாள் அருள் பெற்றுள்ளார். ஒட்டக்கூத்தர்: இரண்டாம் இராஜராஜ சோழன் அவையில் புகழ்பெற்று விலகிய ஒட்டக்கூத்தர் தான் கவி பாடும் முன் கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார். ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.