நாகை: நடுக்கடலில் உணவின்றி மயங்கிய இலங்கை மீனவர்களில் ஒரு மீனவரை பத்திரமாக மீட்டு துறைமுகத்திற்கு அழைத்து வந்த நாகை மீனவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
நாகை அடுத்த அக்கரைப்பேட்டையை சேர்ந்த தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும் நாகை மாவட்ட திமுக செயலாளருமான கௌதமனுக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் 9ம் தேதி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கடந்த 29ம் தேதி மதியம் 12 மணி அளவில் வேளாங்கண்ணிக்கு நேர் கிழக்கே 350 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த ஒரு பைபர் படகில் மீனவர் ஒருவர் மயங்கி நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். துரிதமாக செயல்பட்ட மீனவர்கள் மயங்கி இருந்தவருக்கு குடிநீர் மற்றும் குளிர்பானம் வழங்கி தங்களது விசைப்படையில் ஏற்றியுள்ளனர். அவரிடம் விசாரித்ததில் இலங்கை திரிகோணமலையை சேர்ந்த அகமது இர்ஃபான் என்பதும் அதே ஊரை சேர்ந்த அஸ்டன் என்பவரும் கடந்த 20 நாளைக்கு முன்பு திரிகோணமலையிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில் படகு பழுது ஏற்பட்டதால் திசை மாறி நடுகடலுக்கு படகு இழுத்து சென்றதும், உணவு குடிநீர் இன்றி 20 நாட்களுக்கு மேல் கடலில் தத்தளித்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்டன் பசி கொடுமையால் கடலில் குதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து அகமது இர்ஃபான் படகுடன் பத்திரமாக மீட்டு இன்று காலை நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அவரையும், படகையும் மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர் அகமது இர்ஃபான் சிகிச்சைக்காக ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.