நாகையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.1000 லஞ்சம் வாங்கிய வல்லம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். கைதான விஏஓ-விடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வல்லம் உரங்குடி பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி(45). இவரிடம் பட்டா பெயர் மாறுதலுக்காக வல்லம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராமன் (36) லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரூ.2000த்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு மேற்கொண்டு ஆயிரம் ரூபாய், கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்யப்பட்ட பட்டாவை கொடுக்க முடியும் என விஏஓ கூறியதாக, லஞ்ச ஒழிப்புத் துறையில் வீரமணி புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரசாயனம் தடவிய ரூ.1000 பணத்தை வீரமணி கிராம நிர்வாக அலுவலரிடம் இன்று கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாரிடம் வசமாக சிக்கினார். லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மனோகரன், ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைதான விஏஓ-யிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.