தமிழ்நாட்டில் மொழிப்போர் தியாகிகள் தினம் ஆண்டு தோறும் ஜனவரி 25 ஆம் தேதி கடைப்பிடிக்கபடுகிறது. சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி ,சிவகங்கை ராஜேந்திரன், என பலர், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்களது உயிரை நீத்துள்ளனர். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் 1960-களில்தான் உச்சத்தை எட்டினாலும், 1930 களிலேயே எதிர்ப்பு தொடங்கிவிட்டது. 




அனைத்து பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக 1938 ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையிலான சென்னை மாகாண அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகளார் உள்ளிட்டோர் வழிகாட்டுதலில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற நடராசன், உடல்குன்றி சென்னை சிறையில் உயிரிழந்தார். மொழிப் போராட்டத்தின் முதல் களப் பலி அவர்தான். அதைத் தொடர்ந்து கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்துவும் சென்னை சிறையில் உயிர் நீத்தார்.நடராசன், தாளமுத்துவின் உயிரிழப்பை தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்ததால், இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணை 1940 ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது. ஆனால், 1965 ல் இந்திய ஆட்சிமொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்று, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தலைமையிலான காங்கிரஸ் அரசின் அறிவிப்பால், மீண்டும் போராட்டம் உருவானது. அப்போது அண்ணா தலைமையில் தி.மு.க.வின் போராட்டம் உக்கிரமானது. இதில், தீக்குளித்தும், குண்டடிப்பட்டும் மாணவர்கள், இளைஞர்கள் பலர் உயிரைவிட்டனர்.


 




போராட்டத்தால் நெருக்கடி அதிகரிக்கவே, வேறு வழியின்றி இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரும் என்ற முடிவுக்கு காங்கிரஸ் அரசு வந்தது. இதனால் மாணவர்களின் 50 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தின் தாக்கத்தால், 1967-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு 50 ஆண்டுகளாக தொடர்ந்து திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சியமைத்து வருகிறது.




இந்நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்த மாணவர் சாரங்கபாணி 1965 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி கல்லூரி வளாகத்திலேயே இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்மீது தீவைத்து  கொண்டு   உயிர் நீத்தார்.  அவரது நினைவை போற்றும் வகையில், அக்கல்லூரி வாயிலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தன்று  பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவரது நினைவு தினம் மயிலாடுதுறையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மயிலாடுதுறை திருக்குறள் பேரவை தலைவர் பவுல்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் ந.மு.தமிழ்மணி பங்கேற்று புகழஞ்சலி செலுத்தி பேசினார். இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில், தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.