திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கான பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பள்ளி இடை நின்றவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை தொடங்கி இருக்கிறது. அதன் தொடக்க நிகழ்ச்சி பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் 30 வயதிற்குட்பட்ட பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி என்பது தோட்டக்கலை நிபுணர் பயிற்சி, சுற்றுலா வழிகாட்டி பயிற்சி, மற்றும் வீட்டு பராமரிப்பாளர் பயிற்சி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட உள்ளது.

 

ஒரு பயிற்சிக்கு 20 மாணவர்கள் வீதம் மொத்தம் 60 நபர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.மேலும் இந்த பயிற்சிக்கு மாத ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பயிற்சி மொத்தம் மூன்று மாதங்கள் நடைபெறுவதாகவும், பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய கிராமப்புற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சி அளித்து அதன் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை  மேம்படுத்துவதற்காக இந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுவதாகவும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



 

இந்த நிகழ்வில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கிருஷ்ணன்,பதிவாளர் சுலோக்சனா சேகர், பயிற்சி வகுப்பின் கண்காணிப்பு அதிகாரி டாக்டர் சியாமளா உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி பெறும் நபர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த துணைவேந்தர் கிருஷ்ணன், கிராமப்புறத்தைச் சேர்ந்த பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்களுக்கான ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சி வகுப்புகளை மத்திய அரசு திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்திற்கு வழங்கி உள்ளது. இதனை முறையாக பயன்படுத்தி கிராமப்புற பள்ளி படிப்பை இடையே நிறுத்திய மாணவர்கள் பயிற்சி முடித்து வேலை வாய்ப்பினையும் பெறலாம். எனவே இதனை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

 



 

மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து பெருகி வருவதற்கான காரணம் என்ன என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர் குழந்தைகளை பெற்றோர்கள் ஒழுங்கான முறையில் வளர்க்காதே இதற்கு காரணம் என்றும்,உதாரணமாக என்னை எனது பெற்றோர்கள் கண்டிப்பாக வளர்த்த அளவுக்கு தற்போது உள்ள குழந்தைகளை தங்கள் பெற்றோர்கள் வளர்ப்பதில்லை எனவும்,சுதந்திரம் என்கிற பெயரில் அவர்களுக்கு கட்டுப்பாடு என்பதன் அவசியத்தை உணர்த்தாமல் வளர்ப்பதால் தான் இதுபோன்ற குற்றங்கள் பெருகி வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.