தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்களை தேடி முதல்வர் திட்டத்தின் கீழ், அனைத்து ஒன்றியப்பகுதிகளிலும் சுற்றுபயணம் செய்து, பொது மக்களிடம் கோரிக்கை மனுவை பெற்று வருகின்றார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், அனைத்து மக்களும் சிறப்பாக வாழவேண்டும் என்ற நோக்கத்தில் மக்களை தேடி முதல்வர் முகாம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிகல்வி துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திடீரென தஞ்சாவூர் வண்டிக்காரத்தெருவிலுள்ள மாநகராட்சி நடுநிலைபள்ளிக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்.




இதனையறிந்த பள்ளி தலைமையாசிரியர்  ஒடி வந்து, அமைச்சரை பள்ளிக்கள் வரவழைத்தார், கட்டிடங்களில் இயங்கும் வகுப்பறைகளை பற்றி தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி வகுப்பறைக்குள் சென்று கட்டங்களின் உறுதித் தன்மையை பார்வையிட்டு,  அமைச்சர் வகுப்பறைக்குள் வந்தவுடன், அனைத்து மாணவர்களும் குட்மார்னிங் சார் என்று எழுந்து நின்று வரவேற்றனர்.  உடனே அமைச்சர், அனைவரும் உட்காருங்கள்,  குட்மார்னிங் தெரிவித்து, அனைத்து மாணவர்களும் படித்து கொண்டு இருக்கீறீர்களா என்று வாஞ்சையுடன் கேட்டார். படியங்கள் படியங்கள் என்று கூறி கொண்டே, பள்ளி மாணவி ஒருவரை என்ன செய்து கொண்டு இருக்கீறீர்கள் என்று கேட்டார்.




பின்னர், கரும்பலகையிலுள்ள வாசகங்களை காட்டி எழுத்துக்களை மாணவர்களிடம் கேட்டார். இதற்கு மாணவர்கள் அனைவரும் சரியாக பதிலளித்தனர்.  இதனையடுத்து, பள்ளி வகுப்பறைகள் போதுமானதாக உள்ளதா வேறு தேவைகள் என்றால் கூறுங்கள் என்று வகுப்பறைக்குள் இருக்கும் பதாதைகளை பார்வையிட்டார்.  அதில் கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாளர்களின் தொடர்பு எண்களான 1098 மற்றும் 14417 என்று வைத்துள்ளதை பார்த்து, தமிழக அரசின் உத்தரவை மதித்து, அரசு கூறுவதை பின்பற்றி வருகிறீர்கள் என்று பாராட்டினார்.




பின்னர் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு சென்றார், இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்குள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திடீரென உள்ளே வந்ததால், அனைவரும் திகைத்து உற்சாகமாகி விட்டோம். பின்னர் கட்டிடங்கள் தரமானதாக இருக்கின்றதா, சுகாதார வளாகங்கள் துாய்மையாக உள்ளதா, தினந்தோறும் சுத்தம் செய்யப்படுகிறதா, கொரோனா தொற்று குறித்து அரசு கூறும் வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று பள்ளியை பற்றி முழுமையாக பொறுமையுடன் விசாரித்தார்.  பின்னர் மாணவர்களின் கல்வி தரத்தை ஆய்வு செய்யும் விதமாக, மாணவர்களிடம், கரும்பலகையில் உள்ள தமிழ் எழுத்துக்களை பற்றி கேட்டறிந்தார். பின்னர் பள்ளி மற்றும் மாணவர்களின் திறனை கண்டு பாராட்டி தெரிவித்தார்.