நாகை பழைய ஆயுதப்படை மைதானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில்,  50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்டவைகள் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள்  ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

 

நாகை காடம்பாடி பகுதியில் பழைய ஆயுதப்படை மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் நாகை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குப்பைகள் நிறைந்து நெருக்கடியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வானுயர பறந்த கரும்புகை மண்டலத்தை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

 



 

அதனை தொடர்ந்து விரைந்து வந்த 10 க்கும் மேற்பட்ட நாகை தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 20 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் தீயில் கருகி நாசமானது. தீ விபத்து குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தீ விபத்தை வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்கள் பழைய ஆயுதப்படை மைதானத்தில் காய்ந்த இலைகளை குவித்து வைத்து பல்வேறு இடங்களில் கொளுத்தப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பணியில் இருந்த காவலர்களின் இந்த செயலால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கருத்து தெரிவித்தனர். நாகையில் ஆயுதப்படை மைதானத்தில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.