மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், பழையார், திருமுல்லைவாசல், சந்திரபாடி, மடவாமேடு, கொட்டாய் மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த மூன்று நாட்களாக சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரியும் அதனை மறுக்கும் பட்சத்தில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983 ல் உள்ள விதிகாளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என  பல்லாயிரம் மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.




மூன்றாவது நாளான நேற்று தங்களது குடியுரிமை அடையாளங்களான குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை  வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் மீனவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.  அப்போது பேசிய ஆட்சியர் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது என்றும், அதேநேரம் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்  1983ல் உள்ள 21 வகையான விதிகள்  முழுமையாக அமல்படுத்தபடும் எனவும், விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததார். இதனை ஏற்ற சுருக்கு மடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு, மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்  1983ல் உள்ள 21 வகையான விதிகள்  முழுமையாக அமல்படுத்தபடும் வரை  வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.




இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவின் பேரில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்  1983ல் உள்ள 21 வகையான விதிகள்  முழுமையாக அமல்படுத்தும் நடவடிக்கையாக சட்டத்திற்கு புறம்பாக படகுகளில் பயன்படுத்தும் வலை, இஞ்சின் குறித்து  ஆய்வு பணிகளை, கடலோர அமலாக்க பிரிவு, மீனவளத்துறை மற்றும் கடலோரகாவல் துறை அடங்கிய குழுவினர் ஆய்வு தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக 40 கண் அளவிற்கு குறைவாக உள்ள வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட 3 பேர் மற்றும் கரையில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்குள் மீன்பிடித்த 3 படகுகள், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்த 3 பேர் என மொத்தம் ஒன்பது பேர் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 




மேலும் தரங்கம்பாடி, சின்னங்குடி உள்ளிட்ட மீனவர் கிராமத்தில் படகுகள், படகு இஞ்சின் திறன் மற்றும் வலைகளின் தன்மை குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள மீனவ கிராமங்களில் வெளிமாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மூன்று நாட்களுக்கு இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வெளிமாநில  மீன்வளத்துறை அதிகாரிகளின் ஆய்வை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வின் காரணமாக மீனவ கிராமங்களில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.