கொரனோ வைரஸ் தொற்று பரவத் தொடங்கி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு பல்வேறு விதமான இன்னல்களை கொடுத்து வருகிறது. குறிப்பாக வளரும் வேலைவாய்ப்புகளை இழந்தும், பள்ளி கல்லூரி மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் மன அழுத்தம் என்பது மிகுந்து அதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் உருவானது. முடங்கிக் கிடந்த இந்த கிராம மக்களிடம் ஏதாவது செய்ய வேண்டுமென்ற உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது கொரோனா காலம்.




இந்த சூழலில் மன அழுத்தத்தினை போக்க மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வேலம் புதுக்குடியில் ஒரு புதிய முயற்சியினை மேற்கொண்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதி ஊரடங்குகளினால் முடங்கிக் கிடந்த மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்த அப்பகுதி இளைஞர்கள் முடிவெடுத்தனர். அதன்படி இணையம் வழி பல போட்டிகள் நடத்த முடிவு செய்து பல்வேறு வயது மாணவ, மாணவிகளுக்கான போட்டிகளை நடத்தினர். சமுக வலைதளங்களான வாட்சப் மற்றும் ஜூம் வழியாக இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு பணப்பரிசுகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து இரண்டு மாதங்களாக விதவிதமான போட்டிகளை அறிவித்து நடத்தப்பட்டன. ஒவ்வொரு வார முடிவிலும் ஊர் மக்கள் ஜூம் வழி இணைந்து முடிவுகளைத் தெரிந்துகொண்டனர். மேலும் வீட்டில் முடங்கி கிடக்கும் இல்லத்தரசிகளுக்கு உணவு புகைப்படப் போட்டிகள் நடத்தப்பட்டன. 66 குடும்பங்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு புதுப்புது உணவுகளைச் சமைத்து, சிறப்பான முறையில் அழகுபடுத்தி, புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தனர். அவற்றைப் பரிசீலித்த நடுவர்கள் மூன்று வெற்றியாளர்களையும், 10 சிறப்பு ஊக்கப் பரிசுகளையும் தேர்வு செய்தனர். அதுமட்டுமின்றி போட்டியில் கலந்துகொண்ட  அனைத்து குடும்பங்களுக்கும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.




இது குறித்து ஏற்பாட்டுக் குழுவில் இருக்கும் ஜெகபர் அலி, கூறுகையில், “இது எங்கள் ஊர் மக்களுக்கு மிக உற்சாகம் தந்த ஒரு நிகழ்வு. ஊரின் ஒற்றுமையை ஓங்க வைத்த ஒன்று. பல்வேறு நாடுகளில் இருக்கக்கூடிய எங்கள் கிராம சகோதரர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த நிகழ்வு. இதனை பயன்படுத்தி ஊருக்கான பல மேம்பாடுகளை நாங்கள் ஏற்பாடு செய்ய திட்டம் வைத்துள்ளோம். எந்தவித பேரிடர் ஏற்பட்டாலும், நாம் இணைந்து இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று உணர்த்திய நிகழ்ச்சி" என்று நெகிழ்ந்து கூறினார். சிறிய ஊராக இருந்தாலும், வேலம் புதுக்குடி மக்களின் செயல்பாடு, மற்ற ஊர்களுக்கும் அழகிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.