ஒரத்தநாடு அருகே புதூர் கிராமத்தில், யானை மேல் அழகர் அய்யனார் கோயிலில் 35 டன் எடையுள்ள யானை, குதிரை கற்சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.  இதில் பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர்  மாவட்டம் ஒரத்தநாடு புதூர் கிராமத்தில், யானைமேல் அழகர் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டு பழமையான இக்கோயில் உள்ளது. இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள சுற்றுப்பகுதிகளில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, ஏராளமானோர் இறந்தும், அவதிக்குள்ளானார்கள். இதனையடுத்து அப்போதுள்ள ஊர்பெரியவர்கள், புதுாரில் அய்யனாரை வைத்து வழிபாடு செய்தனர். அதன் பிறகு உடல்உபாதையின் தாக்கம் குறைந்தது. அய்யனாரை வழிபட்டதால், தான் குணமானது என்ற நம்பிக்கையில், அந்த அய்யனாருக்கு பெருமை சேர்க்க வேண்டும், கௌரவப்படுத்தும் வேண்டும் என்ற எண்ணத்தில், யானை மேல் வைத்து அய்யனாரை ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் அந்த அய்யனாருக்கு யானை மேல் அய்யனார் என்ற பெயர் பெற்றது.




இக்கோயில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், கிராம மக்கள் சார்பில், கடந்த 2017 ஆம் ஆண்டு கும்பாபிஷேக திருப்பணிகளை துவக்கினர். இதில் 29 லட்சம் அறநிலையத்துறை சார்பிலும், மீதம் தொகை கிராம பொதுமக்கள் சார்பிலும் நிதிதிரட்டி சுமார் 3 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கோயில்  முழுவதும் கருங்கற்களை கொண்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 70 அடி நீளமும், 36 அடி அகலமும், 13 அடி உயரமும் கொண்ட மகா மண்டபத்தில், கலை நுட்பத்துடன் கூடிய 32 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் கடந்த ஆறு மாத காலமாக 27 லட்சம் மதிப்பீட்டில், கோயில் மகாமண்டப முகப்பில் இருபுறம் வைக்க, 50 டன் எடை அளவு உள்ள ஒரே கல்லில், 23 டன் அளவுக்கு யானை சிலை, 11 அடி உயரத்திலும், 13 அடி நீளத்திலும் வடிவமைக்கப்பட்டது. அதே போல், 30 டன் எடை அளவு உள்ள ஒரே கல்லில்,  12 டன் அளவில் குதிரை  சிலையும், 11 அடி உயரமும், 13 அடி நீளத்திலும் வடிமைக்கப்பட்டது.




மேலும், கோயில் சுற்றுச்சுவரில் பக்தர்களை வரவேற்கும் வகையில் 6.5 அடி உயரத்தில் இரண்டு விளக்குடன் கூடிய பாவை கற்சிலையும், இதே போல் நான்கு அடி உயரத்தில் யானை பாகன் சிலையும்  வடிவமைக்கப்பட்டது. இந்த  சிலைகளை, திருப்பூரில் இருந்து பெரிய லாரியில்  கடந்த மூன்று நாட்களுக்கு முன் புறப்பட்டு ஒரத்தநாட்டுக்கு  கொண்டு வரப்பட்டது. பின்னர்  மேள, தாளம் வானவேடிக்கையுடன், கடைவீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் பலரும் வழியில் சிலைகளுக்கு மலர் தூவி வரவேற்று வழிபட்டனர்.


தொடர்ந்து  காலை, கோயில் முகப்பில் அமைக்கப்பட்ட மேடையில், கிரேன் மூலம் இருச்சிலைகளும் பீடத்தில் பொறுத்தப்பட்டது. தொடர்ந்து இருச்சிலைகளுக்கும் பட்டு துணி அணிவித்து, மஞ்சள், குங்குமம் கொண்டு அபிஷேகம் நடத்தி தீபாரதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து சிலைகளை வடித்த சிற்பி மணி அவரது சகோதர்கள், புதுக்கோட்டை நமணசமுத்திரத்தைச் சேர்ந்த சிற்பி ஆ.முத்து  ஆகியோருக்கு கோயில் நிர்வாகம் சார்பில், பாராட்டி சிறப்பு செய்தனர்.