மத்திய அரசு இந்தியாவில் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கு அறிவித்தது. அதில் தமிழகத்தில் உள்ள 11 நகரங்களில் தஞ்சை நகரமும் ஒன்று. இதற்காக 1289 கோடி  ஒதுக்கியுள்ளது. இதில் மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் வழங்குகிறது. இந்த நிதியின் கீழ் பாரம்பரியமான தஞ்சாவூர் நகரை மேலும் அழகு படுத்தும் வகையில் கோட்டை அகழி மேம்பாடு, குளங்கள் மறுசீரமைப்பு, குடிநீர் அபிவிருத்தி, புதை சாக்கடை சீரமைப்பு பணிகள், காய்கறி சந்தைகள் சீரமைப்பு, மணிகூண்டு சீரமைப்பு, பழைய பேருந்து நிலையம் புதுப்பித்தல்,  பூங்காக்கள் சீரமைப்பு, நகரங்களின் சாலைகள் புதுப்பித்தல், நகர்புறங்களில் தெருக்கள் மேம்பாடு, புராதன சின்னங்கள் பழமை மாறாமல் சீரமைப்பது என 90 திட்டங்கள்

  தொடங்கப்பட்டன. இதில் 16 திட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்த திட்டத்தின் ஒருபகுதியாக தஞ்சாவூர் மேரீஸ்கார்னர் - சாந்தபிள்ளைகேட் மேம்பாலத்தின் கீழ்  பகுதியை இரவு நேரங்களில் ஒளிரும் வண்ண மின் விளக்குகளால் மிளிரச் செய்ய டைனமிக் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த  விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், பாலம் மாலை மற்றும் இரவு நேரத்தில் மின்னொளியில் அழகுடன் மிளிரத் தொடங்கியுள்ளது. தற்போது சோதனை முயற்சியாக மின்விளக்கு எரியத் தொடங்கியுள்ளது. இந்த மின்விளக்குகள் எரிவதை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர். இதே  போல் தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள பழைமையான மன்னர் காலத்தில் வெட்டப்பட்ட அய்யன்குளமும், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகமும் டைனமிக் எல்இடி வண்ண மின் விளக்குகளால் ஒளிர விரைவில் மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. 


இதுகுறித்து தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தஞ்சாவூர்  மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.  தஞ்சாவூர் மாநகரை அழகுபடுத்தும் பணிகளில் ஒன்றாக தஞ்சாவூர் மேரீஸ்கார்னர் - சாந்தபிள்ளைகேட் மேம்பாலத்தில் சுமார் 100 மீட்டர் நீளத்துக்கு பாலத்தின் கீழ்பகுதியில் டைனமிக் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது சோதனை முயற்சியாக மின் விளக்குகள் எரியத் தொடங்கியுள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.  இதனால் பாலத்தின் கீழ் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டுவது தடுக்கப்படும். சென்னையில் நேப்பியர் பாலம் உள்ளிட்ட 16 இடங்களில்  இதுபோன்று டைனமிக் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. அதே போல் தஞ்சாவூரிலும் மூன்று இடங்களில் 2 கோடி செலவில் டைனமிக் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளது என்றனர்.