தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வல்லத்தில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் புதிய திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்.

சென்னையில் முதல்வர் காணொலிக்காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் "நலம் காக்கும் ஸ்டாலின்" என்று புதியதிட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தஞ்சாவூர் அருகே வல்லம் ஜெயின்ட் சேவியர் நடுநிலைப்பள்ளியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். தஞ்சாவூர் எம்.பி., ச.முரசொலி, எம்எல்ஏக்கள் துரைசந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், க.அன்பழகன், கா. அண்ணாதுரை, என்.அசோக்குமார்,தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணைமேயர் அஞ்சகம் பூபதி முன்னிலை வகித்தனர்.

முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் அரங்கை பார்வையிட்டு தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 

அந்த வகையில் தஞ்சாவூர் அருகே வல்லம் பேரூராட்சியில் ஜெயின்ட் சேவியர் நடுநிலைப்பள்ளியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் 48 போன்ற திட்டங்களின் வரிசையில் நலம் காக்கும் ஸ்டாலின் என்னும் முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

இம்மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ரத்தபரிசோதனை, இசிஜி எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக செய்யப்படும். இங்கு பொதுமருத்துவம்,  மகப்பேறு மருத்துவம், கண், காதுமூக்கு தொண்டைமருத்துவம், பல், எலும்பு, நரம்பியல் மருத்துவம், மனநல மருத்துவம்,  நுரையீரல், இதயம்,தோல் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இயன்முறை மருத்துவம், இயற்கைமருத்துவம், நுண்கதிர் மருத்துவம், அல்ராசவுண்ட் மருத்துவம் உள்ளிட்டசிறப்புமருத்துவநிபுணர்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,  எக்கோ கார்டியோ கிராம், பெண்களுக்கான கர்ப்பப்பைவாய் மற்றும் மார்பகபுற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

முதலமைச்சரின் மருத்துவகாப்பீட்டுஅட்டைமற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைசார்பாகஅமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முகாமில் பங்கு பெற்று பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பின்னர் அமைச்சர் கோவி.செழியன் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை சார்பில் 3 பயனளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஒரு பயனாளிக்கு திருமண உதவித்தொகைக்கான ஆணை, தமிழ்நாடு தூய்மைபணியாளர்கள் நலவாரியம் (தாட்கோ) சார்பில் உறுப்பினர் அடையாளஅட்டை ஆகியவற்றை வழங்கினார்.

முகாமில் மாவட்டவருவாய் அலுவலர் தியாகராஜன், மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குனர்(பொ) அன்பழகன், மாவட்டசுகாதாரஅலுவலர் கலைவாணி, நகரநலஅலுவலர் நமச்சிவாயம், வருவாய் கோட்டாட்சியர் .இலக்கியா, தொழிலாளர் உதவியாளர் நடராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.