திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நுகர்வோர் கருத்தரங்கில் கெட்டுப்போன மில்க் ஷேக் பானம் வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சில தினங்களுக்கு முன் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் சார்பில் நுகர்வோர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கு பெற்ற கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் நுகர்வோர் அமைப்புகளை சார்ந்தவர்கள் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். முன்னதாக நலத்திட்ட உதவிகள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற கட்டுரை கவிதை ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் அயோடின் உப்பை கண்டறியும் பரிசோதனை மற்றும் கலப்படத்தை கண்டறியும் வகையில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காப்பித்தூள், மஞ்சள் தூள் போன்றவற்றை கலப்படம் இல்லாத மற்றும் கலப்படத்துடன் உள்ளவை இரண்டும் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் மில்க் ஷேக் பானம் மற்றும் இனிப்பு கார வகைகள் வழங்கப்பட்டன. ஸ்ட்ராபெரி, வெண்ணிலா, பாதாம் என மூன்று ஃப்ளேவர்களில் மில்க் ஷேக் பானம் வழங்கப்பட்டது. இதில் பாதாம் மில்க் ஷேக் மட்டும் கெட்டுப் போய் இருந்தது. அதனை திறக்கும் போது நுரை பொங்கி வந்ததுடன் உள்ளே திரிந்த நிலையிலும் இருந்தது. மேலும் கூட்டத்தில் இருந்து வெளியில் வந்த ஒருவர் எடுத்து வந்த பாதாம் மில்க் ஷேக் திடீரென்று வெடித்தது. இதன் காரணமாக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
குறிப்பாக உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கில் வழங்கப்பட்ட மில்க் ஷேக் பானம் கெட்டுப் போய் இருந்த சம்பவம் என்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.