பருத்தி சாகுபடிக்கு தேவையான தரமான விதைகளை வேளாண்மை விரிவாக்க அலுவலகங்கள் மூலம் மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் முடிந்த நிலையில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்ற நிலையில் நிகழாண்டில் இதுவரை 17 ஆயிரத்து 760 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் பருத்தி சாகுபடி காண விதைகள் தனியார் கடைகளில் கிலோ ஒன்றுக்கு 950 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை தெளிக்க வேண்டிய நிலையில் அந்த விதைகள் தனியார் கடைகளில் தரமாகவும் சுத்தமாகவும் இல்லை எனவே வேளாண்மை துறை வேளாண்மை விரிவாக்க அலுவலகங்களின் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு பருத்தி விதையை விநியோகிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக விவசாயி மணிவேல் கூறியபோது:
கோடை காலத்தில் நெல் சாகுபடிக்கு மாற்றாக பருத்தி சாகுபடி செய்வோம் என்ற அடிப்படையில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். இது ஆண்டுக்காண்டு இதன் பரப்பளவு அதிகரித்து வருவதற்கு காரணம் பருத்திக்கு ஒரு அளவுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இந்த நிலையில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிகளில் ஏற்படுகின்ற நெருக்கடிகளை பருத்தி சாகுபடி ஓரளவுக்கு சமாளிக்க உதவி வருகிறது. இந்த நிலையில் நிகழாண்டில் கடைகளில் கிடைக்கின்ற விதைகள் தரமானதாக இல்லை. இதனால் பருத்தி மகசூல் இழப்பு ஏற்படும் என்கின்ற அச்சம் உள்ளது எனவே வேளாண்மை துறை இதனை ஆய்வு செய்து தங்களது வேளாண் விரிவாக்க மையங்களில் பருத்தி விதையை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும். அதுபோல் பருத்திக்கான உரமானியம் வழங்க வேண்டும். ட்ரோன்கள் மூலம் உரம் தெளிப்பதற்கு குறைந்த வாடகையில் ட்ரோன்கள் வழங்க வேண்டும் எனக் கூறினார்.