திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்.எஸ் நகரில் நாளை தொடங்கி வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் நடைபெறும் புத்தக திருவிழாவை முன்னிட்டு வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் கிடாரங்கொண்டான் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் புத்தகங்களுடன் ஒரு சுயப் படம் என்கிற நிகழ்வு நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் எழுத்தாளர் ஐ.வி நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்வில் திருவாரூரில் முதல் முறையாக நடைபெறும் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் புத்தகங்களின் பெருமை குறித்தும் வாசிப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் உரையாற்றினர்.



 

இந்த நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ புத்தகங்களை வாசிப்பதன் மூலமாக வருங்காலத்தில் சிறந்த தலைவராக உருவெடுக்கலாம்.21 நாட்கள் தொடர்ந்து புத்தகங்களை வாசித்தால் அதுவே நமக்கு பழகிவிடும்.தவறுகளை செய்து அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு என்றைக்கு பெரிய ஆளாக வளர்வது எனவே புத்தகங்களின் மூலம் அடுத்தவர்களின் அனுபவங்களை கற்றுக்கொண்டு குறுகிய காலத்தில் சிறந்த தலைவராகவும் சிந்தனையாளராகவும் நாம் உருவெடுக்க முடியும்.பெரிய தலைவர்களாகவும் சிந்தனை யாளர்களாகவும் இருந்தவர்கள் அனைவரும் சிறந்த வாசிப்பாளர்களாக இருந்தவர்கள் தான் என்று பேசினார்.



 

நிகழ்வின் இறுதியில் புத்தகங்களுடன் ஒரு சுயப் படம் என்கிற அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மாணவ மாணவிகளுக்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.மேலும் புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். அப்போது மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியரை சூழ்ந்து கொண்டு தங்களது மொபைலில் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.மாவட்ட ஆட்சியர் நிகழ்வு முடிந்து வெளியேறும் போதும் மாணவ மாணவிகள் அவரை வழிமறித்து ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.