திருவாரூர் மாவட்டம் திருந்துறைப்பூண்டி சாமியப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசிரியர் சக்கரபாணி. இவர் தலைஞாயிறு ஒன்றியம் மகாராஜபுரத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தனக்கு சொந்தமான 3 மா விவசாய நிலத்தில் 90 முதல் 100 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் பாரம்பரிய நெல் ரகமான ’பூங்கார் நெல்' ரகத்தை 1 கிலோ 80 ரூபாய்க்கு வாங்கி 20 கிலோ நேரடி விதைப்பு செய்து இயற்கை முறையில் சாகுபடி பணிகளை மேற்கொண்டார்.
நெல் விதைத்த 103ஆவது நாளில் பூங்கார் வகை நெல் ரங்கம் 1,590 கிலோ மகசூல் கொடுத்துள்ளது. 3 மா நிலத்தில் பூங்கார் நெல் விதைரகம் சாகுபடிக்கு விதை, ஆள் கூலி, இயற்கை உரம், பஞ்சகாவ்யா உள்ளிட்ட செலவுகள் 9,220 ரூபாய் மட்டுமே செலவானதாக கூறும் ஆசிரியர் சக்ரபாணி. தற்போது இந்த நெல்லை விதைநெல்லாக விற்றால் ஒரு கிலோ 80 ரூபாய் வரை விற்க முடியும் எனவும் அவ்வாறு விற்பனை செய்தால் சுமார் ஒரு லட்சம் வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், செலவு போக 90,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும் எனவும் சக்ரபாணி தெரிவித்துள்ளார். மேலும் இதனை அரிசியாக மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் 63,600 வரை லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே பகுதியில் 80 குழி விவசாய நிலத்தில் பாரம்பரிய நெல் ரகமான குள்ளக்கார் 7 கிலோ நேரடி விதைப்பு செய்து 390 கிலோ மகசூல் எடுத்துள்ளார் இதுவும் சிகப்பு அரிசி ரகம் 90- முதல் 100 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பூங்கார் நெல்லின் சிறப்புகள்: பூங்கார் நெல் ரகத்தின் வயது 70 நாட்கள் இருப்பினும் ஒரு சில இடங்களில் 70 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகிறது. இது சிவந்த நிறமுடைய நெல் ரகம் அரிசியும் சிவப்புதான் நேரடி விதைப்புக்கு ஏற்ற ரகம். பாரம்பரிய நெல் ரகங்களில் குறுகிய காலப் பயிர். எல்லா பருவங்களுக்கும் ஏற்ற பயிர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மண் வகைகளுக்கும் ஏற்ற ரகம். ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்ய ஏற்ற ரகம் பூங்கார். பாரம்பரிய நெல் ரகங்களில் மழை, வெள்ளத்தை தாங்கி வளரக் கூடியது. விதைப்பு செய்து நாற்றங்கால் அல்லது வயலில் பத்து நாட்களுக்கு மேலாகத் தண்ணீர் வடிய வழியில்லாமல் இருந்தாலும் முளைக்கும் திறனும், முளைத்த விதையும் பாதிக்கப்படாது.
கதிர் முற்றி அறுவடை நேரத்தில் தொடர் மழையாலும் மழை நீர் சூழ்ந்திருக்கும் காலத்தில் நெல்கதிர் தண்ணீருக்குள் இருந்தாலும், அது முளைக்காது. குறைந்தபட்சம் 40 நாள் விதை உறக்கத்துக்கு பிறகே முளைக்கும் தன்மை கொண்டது. மருத்துவ குணம் கொண்ட இந்த ரக அரிசியை மகப்பேறு காலங்களில் சாப்பிட்டுவந்தால், ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்