தஞ்சாவூா்: தஞ்சை மாநகரில் 24 மணி நேரம் குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் 80 சதவீதம் தஞ்சை மாநகராட்சியில் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது. மார்ச் மாதத்திற்குள் 100 சதவீத சாலைப்பணிகளும் நிறைவடையும் என்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் சண் ராமநாதன் தலைமை வகித்தார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
கவுன்சிலர் கோபால்: 24 மணி நேரமும் குடிநீர் வரும் என்கிறீர்கள். இதற்காக மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டதா? குடிநீர் ஊதா நிற குழாயில் வருமா ? பாதாள சாக்கடை பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.
மேயர் சண். ராமநாதன்: மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து அனைத்து பணிகளும் முடிவடைந்த பிறகு 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்கும். ஊதா நிற குழாயில் தண்ணீர் வரும். பாதாள சாக்கடை பிரச்சினை சரி செய்யப்படும். தஞ்சை மாநகராட்சியில் 80 சதவீத சாலைப்பணிகள் நிறைவடைந்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் 100 சதவீதப்பணிகளும் முடிவடைந்து விடும்.
கவுன்சிலர் மணிகண்டன்: பல வார்டுகளில் சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பல விளக்குகள் எரியாமல் உள்ளது. மாநகராட்சி தூய்மை பயனர்களுக்கு போனஸ் குறைவாக உள்ளது . அதனை அதிகப்படுத்தி பிஎப், இஎஸ்ஐ பிடித்தம் செய்ததற்கான ரசீது கொடுக்க வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா, மண்டபங்கள் விதிமுறைகளை மீறி லே அவுட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது . எந்த வகைப்பாடுக்காக அந்த இடம் ஒதுக்கப்பட்டதோ அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதா ?
ஆணையர் கண்ணன்: தஞ்சாவூா் தோப்புக்குளம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து இருந்தார். அவரிடமிருந்து இடம் மீட்கப்பட்டது. இதேபோல் நான்கு இடங்களில் ஆக்கிரமிப்பில் இருந்து பமாநகராட்சி இடத்தை இடத்தை கையகப்படுத்தி உள்ளோம்.
கவுன்சிலர் ஜெய்சதீஷ்: எனது வார்டு செண்பகவல்லி நகரில் பாதாள சாக்கடை பிரச்சினை சரி செய்யப்படாமல் உள்ளது. இதை உடன் சரி செய்ய வேண்டும். தஞ்சை மாநகரில் 100-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சியிடம் அனுமதி வாங்கப்பட்டதா?
மேயர் சண்.ராமநாதன்: மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வைப்பதற்கு மட்டுமே மாநகராட்சி அனுமதி கொடுக்கும். அதன்படி இரண்டு கடைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. மற்ற கடைகள் மாநகராட்சிக்கு சொந்தமில்லாத இடத்தில் வைத்துள்ளதால் நாம் அனுமதி கொடுப்பதில்லை. அதற்கு ஆர்.டி.ஓ, டி.ஆர்.ஓ, எஸ்.பி ஆகியோர் அடங்கிய கமிட்டி உள்ளது. அவர்கள் தான் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி கொடுத்து வருகின்றனர். இனி அடுத்த தீபாவளி பண்டிகைகளில் இருந்து பட்டாசுக்கடை அமைக்கும் கமிட்டியில் மாநகராட்சி ஆணையரும் இடம் பெற வேண்டும். தஞ்சை மாநகரில் எங்கு பட்டாசு கடை அமைக்க வேண்டும் என்றாலும் அதற்கு மாநகராட்சி இடமும் அனுமதி பெறும் வகையில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
கவுன்சிலர் கோபால் : எனது வார்டில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. தார் சாலை வசதி சரிவர போடப்படவில்லை. சமுதாயக்கூடமும் கட்டித் தரவில்லை. பாதாள சாக்கடை பிரச்சனையும் உள்ளது.
மேயர் சண்க்ஷராமநாதன்: இந்த மாமன்ற கூட்டம் முடிந்த பிறகு உங்களது வார்டுக்கு நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் .
கவுன்சிலர் சரவணன்: சீனிவாசபுரம் கிரி ரோட்டில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும். பொதுக்கழிவறை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது . புதிய கழிவறை கட்டித் தர வேண்டும்.
கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி: சாமந்தான்குளத்தை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். எங்களது வார்டுக்கு குப்பைகள் அள்ளும் வண்டிகள் பல நாட்களாக வருவதில்லை. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் கண்ணுக்கினியாள்: 36-வது வார்டில் எந்தவித அடிப்படை வசதியும் செய்து முடிக்கவில்லை. பாதையில் சாக்கடை பிரச்சனை பல நாட்களாக உள்ளது . தெருக்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதாகோவில் தெரு உள்ளிட்ட பல இடங்களில் தார் சாலை போடவில்லை. உடனடியாக அனைத்துப் பிரச்சனைகளையும் சரி செய்து தர வேண்டும்.
கவுன்சிலர் ஆனந்த்: தஞ்சை மாநகரில் உள்ள அனைத்து படித்துறைகளையும் பராமரிக்க வேண்டும் . அய்யன் குளத்தில் மீன் விட்டு அதனை பிடிக்க அனுமதி கொடுத்தது யார் ?
இதேபோல் கவுன்சிலர்கள் உஷா, நீலகண்டன் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இதற்கு பதில் அளித்து மேயர் சண் ராமநாதன் பேசும்போது, கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை மாமன்ற கூட்ட அரங்கில் தலைவர்களின் படங்கள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தந்த வார்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் பெயர்கள் இடம் பெறும் வகையில் கல்வெட்டுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மாநகரில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.