தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஜாதி பெயரை கூறி வாலிபரை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு, வெள்ளூர், புதுவளைவு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகன் பாசிலின் (21). இவர் பாப்பாநாட்டில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி இரவு வேலை முடிந்து பாசிலின் தனது பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். தனது பைக்கின் சைலன்ஸரில் சத்தம் அதிகம் வருவது போல் பாசிலின் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

வெள்ளூர் புதுவளைவு பகுதியில் பாசிலின் பைக்கில் வந்து கொண்டிருந்த போது தொண்டராம்பட்டு மேற்கு விஜயகலாநிதி என்பவரின் மகன் லோகநாதன் (21), நெம்மேலி மேற்கு பகுதியை ஆறுமுகம் என்பவரின் மகன் சாரதி (23), திருமூர்த்தி என்பவரின் மகன் கோபிநாத் (30), முனிகுமார் என்பவரின் மகன் அருண்குமார் (23), புலவன்காடு கீழத்தெரு குழந்தைவேல் என்பவரின் மகன் உதயன் (21), பாப்பாநாடு ஆவிடநல்விஜயபுரம் அறிவழகன் என்பவரின் மகன் பிரகதீஸ்வரன் (26) ஆகியோர் மதுபோதையில் நின்று பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

Continues below advertisement

அப்போது பாசிலின் பைக் சைலன்ஸர் சத்தத்தை கேட்டு லோகநாதன் உட்பட 6 பேரும் சேர்ந்து தகராறு செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து பாசிலின் வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் அவரை பின்தொடர்ந்து வந்த லோகநாதன் உட்பட 6 பேரும் பாசிலின் வீட்டிற்குள் புகுந்து அவரை ஜாதி பெயரை கூறி திட்டி கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த பாசிலின் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் ஒரத்தநாடு டிஎஸ்.பி., கார்த்திக்கேயன் மற்றும் பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து லோகநாதன் உட்பட 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.