மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மங்கைமடம், திருவாலி, சூரக்காடு, உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான ஏக்கர் நிலத்தில் தர்பூசணி பழங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி அறுவடை சமயமான இந்த வேளையில் கொரோனா ஊரடங்கால் தர்பூசணியை விற்பனை செய்ய முடியாமல் வயலிலேயே அழுகிக் கிடக்கின்றன. மேலும் மீதம் உள்ள பழங்களை கால்நடைகளை மேயவிட்டுள்ள விவசாயிகள், சாகுபடி செய்த முதலீட்டை கூட பெற முடியாமல்  வேதனை அடைந்துள்ளனர்.




கோடைக்கால பயிரான தர்பூசணி உடல் வெப்பத்தை தணிக்ககூடியது. மேலும் கோடையில் அனைவரும் விரும்பி உண்ணும் பழம் என்பதால் கோடைக்காலத்தில் இவை அதிகம் விற்பனை ஆகும். குறைந்த செலவில் அதிக லாபமும் தரக்கூடியது என்பதால், இதை மயிலாடுதுறை மாவட்டம் விவசாயிகள் பலர் தங்கள் நிலங்களில் பயிரிடுவர். இங்கு விளையக்கூடிய தர்பூசணி பழங்கள் சென்னை, திருச்சி, மதுரை,கோவை போன்ற வெளி மாவட்டங்களுக்கு அதிக அளிவில் அனுப்பி விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு பகுதிகளிலும் இருந்து  வியாபாரிகள் வந்து பழங்களை மொத்தமாக வாங்கிச் செல்வார்கள். 




தர்பூசணி பழங்கள் ஒவ்வொன்றும் 3 கிலோ முதல் 10 கிலோ வரை எடை கொண்டதாகவும் ஒரு கிலோ தர்பூசணி 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை போகும் என்றும் பழத்தின் எடைக்கேற்ற விலை நிர்ணயம் இருக்கும். இங்கு விளையும் தர்பூசணி பழங்கள் மிகுந்த இனிப்பு சுவை உடையதால், வெளியூர்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வார்கள். ஆனால் கோடை காலமான மார்ச்,ஏப்ரல்,மே, ஜுன் மாதங்களை நம்பி பயிரிடப்பட்டிருந்த தர்பூசணி, தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 3 மாதங்களாக வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்யாததால் பழங்கள் வயல் வெளியில் தேக்கம் அடைத்து அழுக தொடங்கி முழுவதும் அழுகி விணாகிக் கிடக்கின்றது.





இதுகுறித்து  தர்பூசணி பயிரிட்ட விவசாயிகள் கூறுகையில், தாங்கள் தர்பூசணி சாகுபடிதான் பிரதானமாக செய்து வருகிறோம். இந்த மூன்று மாதத்தில் வரக்கூடிய வருமானத்தை வைத்துக்கொண்டுதான் ஆண்டு முழுவதும் எங்கள் வாழ்வாதாரம் இருக்கும். இதேபோன்றுதான் கடந்த ஆண்டும் பயிரிட்ட தர்பூசணிகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் முழுவதும் அழுகி பாழானது.





கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தை இந்த ஆண்டு ஈடு செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் மீண்டும் வட்டிக்கு கடன் பெற்று தர்பூசணியை பயிர் செய்தோம். ஆனால், சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் பழங்களை அறுவடை செய்ய முடியாமல் வயலிலேயே விட்டுவிட்டோம், வீணாக வயலில் அழுகிய தர்பூசணி பழங்களை தற்போது கால்நடைகளுக்காவது உணவாகட்டும் என ஆடு மாடுகளை வயலில் மேய விட்டு விட்டு எவ்வாறு வாழ்வது என வழி தெரியாமல் நிற்பதாக வேதனையுடன் கண்ணீர் மல்க கூறினார்.