தஞ்சாவூர்: எஸ்.ஐ.ஆர். படிவங்களை பி.எல்.ஏ. 2விடம் வழங்கக் கூடாது என்று அதிமுகவினர் கோரிக்கை விடுத்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

Continues below advertisement


வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்.ஐ.ஆர்.) பணியில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் - 2 (பி.எல்.ஏ. - 2) படிவங்களை வாக்காளர்களிடம் வழங்கவோ, திரும்ப வாங்கவோ கூடாது என அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.


தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜத்திடம் அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் மா. சேகர் தலைமையில் மாவட்டச் செயலர்கள் எம். ரெத்தினசாமி (மேற்கு), ஆர்.கே. பாரதிமோகன் (கிழக்கு), சி. சேகர் (தெற்கு) ஆகியோர் மனு அளித்தனர். பின்னர் மா. சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:


வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று படிவங்களை வழங்கி வருகின்றனர். இவர்களிடமிருந்து வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மொத்தமாக 50 படிவங்களை வாங்கலாம் என்றும், திருப்பித் தரலாம் எனவும் அறிவித்துள்ளனர்.


இந்த நிலைமை இருந்தால் முறைகேடுகள், தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன. எனவே, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களே படிவங்களைக் கொடுத்து, அவர்களே திரும்ப வாங்க வேண்டும். இதில், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் படிவங்களைக் கொடுக்கவோ, திரும்ப வாங்கவோ கூடாது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தியுள்ளோம். இவ்வறு அவர் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு முதல்கட்டமாக பீகாரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம் உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.


இந்த பணிகள் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெறும். இரண்டாம் கட்டமாக 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 3-ம் கட்டமாக ஆட்சேபனைகள், கோரிக்கைகள் 9-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை பெறப்படும். 4-ம் கட்டமாக பெறப்பட்ட கோரிக்கைகள, ஆட்சேபனைகள் மீது விசாரணை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக 28.10.2025 முதல் 07.02.2026 வரை நடைபெறுகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் கடந்த செவ்வாய்கிழமை முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, 04.12.2025-க்குள் மீள பெறப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்து இருந்தார்.


அதன்படி தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக தஞ்சாவூர் தாசில்தார் அலுவலகத்திற்கு தஞ்சை மாநகராட்சியில் உள்ள 292 பாகத்திற்கு உள்ள விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதை தேர்தல் பிரிவு துணை தாசில்தார் பைரோஜா பேகம் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் ஒப்படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.