தஞ்சாவூர்: தஞ்சை வின்னர் மல்டிமியூரல் அகாடமியில் சிலம்பம் இந்தியா சங்கம் சார்பில் தேசிய அளவிலான நடுவர்களுக்கான ஒருநாள் சிலம்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.

சிலம்பம் இந்திய சங்கத்தின் தந்தை பா. சந்திரமோகன், சிலம்பம் இந்திய சங்க தலைவர் பொன்ராமர், செயல் தலைவர் கண்ணதாசன், சிலம்பம் இந்திய சங்க பொதுச் செயலாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் தமிழகத்தை சேர்ந்த 22 மாவட்டங்களில் இருந்து இந்திய சிலம்ப சங்கத்தில் அங்கீகாரம் பெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் அவர்களின் சிலம்ப பயிற்றுநர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாவட்டத்தின் சிலம்ப சங்கத்தின் செயலாளர்கள் மேற்பார்வையில் இவர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் மாவட்ட போட்டிகள் முதல் அகில இந்திய போட்டிகள் நடத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் பயிற்றுனர்,  நடுவர்களுக்கான,  உடை விதிமுறைகளும் இதில் வகுக்கப்பட்டு, போட்டிகளை எப்படி நடத்த வேண்டும், மாணவர்களுக்கான தனித்திறன் எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும், தொடு முறை பயிற்சிகளை எவ்வாறு நடத்தித் தர வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளும் ஆசிரியர்களுக்கு கையேடுகளாக வழங்கப்பட்டன.

பின்னர் செயல்முறை பயிற்சியும் காண்பிக்கப்பட்டது. பின்னர் 100 மதிப்பெண்களுக்கான எழுத்து தேர்வும் நடைபெற்றது. தேர்வின் அடிப்படையில் பயிற்றுநர்களுக்கு கிரேடு சான்றிதழ் மதிப்பிற்குரிய இந்திய சிலம்ப சங்கத்தின் பொறுப்பாளர்களால் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை சிலம்பம் தஞ்சாவூர்  சங்க மாவட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணா செய்திருந்தார்.

முகாமில் 100க்கும் மேற்பட்ட சிலம்ப பயிற்றுனர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வழிமுறைகளை அவர்களின் மாணவர்களுக்கும் கற்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்த நடுவர் பயிற்சி முகாமின் செயல்முறைகள் மற்றும் வழிபாட்டு நிபந்தனைகள், சிலம்பம் விதிமுறைகள் ஆகியவற்றை தஞ்சை ரெங்கநாயகி, சங்கீதா ஆகியோர் நடத்தினர். இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டார்.

மருத்துவ மதிப்பீட்டு முகாம்


வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.

இதில் தஞ்சை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, மாவட்ட புள்ளியியல் அலுவலர் பொற்கொடி, மாவட்ட உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமேனி சாந்தஷீலா, வட்டார கல்வி அலுவலர்கள் சங்கீதா,பொன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் 37 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள், 54 குழந்தைகளுக்கு யூடிஐடி அட்டைகள், 70 குழந்தைகளுக்கு  முதல்வர்  காப்பீட்டு திட்ட பதிவுகள், 3 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

10 குழந்தைகளுக்கு நலவாரிய பதிவும் செய்யப்பட்டது. 8 குழந்தைகளுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு மருத்துவர்கள்,தொழில் நுட்ப வல்லுநர்கள், வட்டார கணக்காளர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.