வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு வலுப்பெற்றுது. திரிகோணமலைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டு இருந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று அதிகாலை கறியை கடந்தது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தாழ்வு பகுதியாக மாறி அதன்பின் தாழ்வு மண்டலமாக மாறி உள்ள நிலையில் இது கொஞ்சம் கொஞ்சமாக நகர தொடங்கி இலங்கை கடற்பகுதிக்கு சென்றது. இதையடுத்து நேற்று கரையை கடக்க வேண்டிய தாழ்வு மண்டலம் கரையை நேற்று இரவு வரை கடக்கவில்லை.




இன்று அதிகாலைதான் இந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இந்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று வரை தமிழ்நாட்டில் பெரிய மழை பெய்யவில்லை. டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் லேசான மழை பெய்தது. நேற்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையில் இந்த தாழ்வு மண்டலம் நகர்ந்தது. அதை தொடர்ந்து மேற்கு-தென்மேற்கு திசையில் இன்று அதிகாலை நகர்ந்து கரையை கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நேற்று இரவு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை விட்டு விட்டு பெய்து.




இன்று அதிகாலையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து அங்கு மழை விடாமல் பெய்து வருகிறது. இதையடுத்தே டெல்டா மாவட்டங்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் காலையில் இருந்து கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.




இன்று அதிகாலை இலங்கையில் திருகோணமலைக்கு அருகே இந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து நிலையில் நிலப்பகுதியை எட்டியதும் அதன் வலிமை குறைந்தது. இதனால் இலங்கையில் கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் சென்னையில் பிற்பகலுக்கு பின் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





இந்நிலையில் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இந்நிலையில் தற்போது சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மழையால் அறுவடை செய்யவேண்டிய பயிர்கள் மழையில் நனைந்து சாய்ந்து முளைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது, மேலும் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய போதிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் மழையில் நனைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.