நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம், எரவாஞ்சேரி, கொட்டாரக்குடி, கீழத்தஞ்சாவூர், திருப்பயத்தங்குடி ஊராட்சி பகுதிகளில்  முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக ஊராட்சி மன்ற அலுவலகங்களில் முகாம் அமைத்து பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். அதை தொடர்ந்து மேற்கண்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள அரசு  பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு மேற்கொண்டார். பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு மற்றும் கொரோனா நெறிமுறைகளையும் ஆய்வு செய்தார்.



 

அதை தொடர்ந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அரசு அறிவிப்பின்படி செயல்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார். இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கியமேரி,திருமருகல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான சரவணன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் நவநீதம் மகேந்திரன், ரஜினி தேவி பாலதண்டாயுதம், ராஜீவ் காந்தி, தமிழரசி கணேசன்,பாண்டியன்,ஒன்றியக் குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன்,மணிவண்ணன், மஞ்சுளா மாசிலாமணி, ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 



சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ள பாழடைந்த பாலர் பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை




 

நான்கு தலைமுறைகளை கண்ட பள்ளிக்கூடம்  காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்துள்ள நெய்வாச்சேரி நடுநிலைப்பள்ளி. காரைக்கால் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மாணவர்கள் உள்ள பள்ளி இந்த பள்ளி ஆகும்.திருநள்ளாறு, நெய்வாச்சேரி, சுரக்குடி, அத்திப்படுகை, சுப்புராயபுரம், கீழாவூர் , பேட்டை, பூமங்கலம் உட்பட 10க்கும் மேற்பட்ட  சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 288 மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் அதிகம் பேர் இங்கு படிக்கின்றனர். இந்த பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்துவருகிறது. 15 ஆசிரியர்கள் வேலை செய்ய வேண்டிய இடத்தில் ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 8 பேர் மட்டுமே வேலை பார்த்து வருகின்றனர். மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக விளங்கி வரும் இந்த பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி தரம் குறைந்து வருவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும்  கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை என்கின்றனர். 

 



 

இதேபோல மாணவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டுத்திடல் இந்த பள்ளிக்கு இதுநாள்வரை இல்லாமல் உள்ளது. பள்ளிக்கு அருகிலேயே பாழடைந்த கட்டிடம் ஒன்று உள்ளது . முன்பு இந்த கட்டிடத்தில் பாலர் பள்ளி  இயங்கியதாகவும்,பின்னர் கட்டிடம் பழுதடைந்து புதர் மண்டி பாழடைந்து ,கிடப்பதாகவும் தெரிவித்துள்ள பெற்றோர்கள், இந்த கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக  தெரிவிக்கின்றனர். மது அருந்துபவர்களுக்கு இலவச கூடாரமாக இந்த பாழடைந்த கட்டிடம் பயன்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 



 

இதனை இடிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் கூட அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்காமலேயே உள்ளது.  தனியார் யாரேனும் இடிப்பதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக அப்பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் கொதிப்படைந்துள்ளனர். உடனடியாக பாழடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும். பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும். மாணவ மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகளை அதிகரிக்கவேண்டும் .அடிப்படை வசதிகளை பள்ளிக்கு செய்து தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் மாணவர்கள். பெற்றோர்கள், ஊர்மக்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த இருப்பதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.