கார் - டெம்போ டிராவலர் மோதிய விபத்து.. உயர்ந்த பலி எண்ணிக்கை..

தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யாசாமி பட்டி பிரிவு சாலை அருகே காரின் டயர் வெடித்து சாலையின் சென்டர் மீடியன் தாண்டி தஞ்சையில் இருந்து வந்து கொண்டிருந்த டெம்போ டிராவலர் மீது மோதியது.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சை அருகே அய்யாசாமிப்பட்டி பகுதியில் கார் மற்றும் டெம்போ டிராவலர் வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார் டிரைவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. 

Continues below advertisement

சுற்றுலா பயணிகள்:

மயிலாடுதுறை மாவட்டம் பட்டமங்கலம் ஆராயத்தெருவை சேர்ந்தவர் வீரபாபு என்பவரின் மகன் மோஹித்ராஜ்(20). அதே பகுதியை சேர்ந்தவர் கணபதி என்பவரின் மகன் பாரத்மேத்தா (24). கார் டிரைவர். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 7 ம் தேதி திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.

அதேபோல் ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து ஏழு பேர் தஞ்சைக்கு சுற்றுலாவாக ஒரு டெம்போ டிராவலர் வாகனத்தில் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் தஞ்சை பெரியகோயில் உட்பட பல பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். டெம்போ டிராவலரை மதுரை சுப்ரமணியன் நகரை சேர்ந்த விக்னேஷ் (37) என்பவர் ஓட்டி சென்றார்.

டயர் வெடிப்பு:

தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யாசாமி பட்டி பிரிவு சாலை அருகே பாரத் மேத்தா ஓட்டி வந்த காரின் டயர் வெடித்து சாலையின் சென்டர் மீடியன் தாண்டி தஞ்சையில் இருந்து வந்து கொண்டிருந்த டெம்போ டிராவலர் மீது மோதியது. இதில் காரில் வந்த மோஹித் ராஜ் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். கார் டிரைவர் பாரத் மேத்தா மற்றும் டெம்போ டிராவலரில் வந்த ஹைதராபாத்தை சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் விக்னேஷ் ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர்.

கார் டிரைவர் உயிரிழப்பு:

இதுகுறித்து தகவல்அறிந்த செங்கிப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் கார் டிரைவர் பாரத் மேத்தாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. தீவிர சிகிசையில் இருந்து வந்த நிலையில் கார் டிரைவர் பாரத் மேத்தா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

Continues below advertisement