தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவசத்திரம், மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்குள்ள பெரும்பாலானோர் நாட்டு மற்றும் விசைப்படகில் சென்று மீன் பிடித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.  ஆனால் அங்குள்ள சிலர் வைத்துள்ள இரட்டை மடி வலையில் மீன் பிடிப்பதால், நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்காமல் போய் விடுகிறது. இரட்டை மடி வலையில் மீன்களை பிடிக்கும் போது, கடல் மீன் குஞ்சுகள், சிறிய ரக மீன்கள், கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் இரட்டை மடி வலையில் சிக்கி கொள்கிறது. இதனால் மீன்களின் இனப்பெருக்கம் குறைந்து விடுகிறது. மேலும், நாட்டுப்படகு மீனவர்கள்,கடலுக்குள் சென்று மீன்கள் பிடிக்கும் போது, மீன்கள் கிடைக்காமல், ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பி வருகின்றார்கள்.




இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்கள், பாதிக்கும் நிலை ஏற்பட்டதால், கடந்த மாதம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டணம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள், போராட்டம் செய்தனர். அப்போது, மீன்வளத்துறை அதிகாரிகள், இரட்டை மடி வலையை யாரும் பயன்படுத்தக்கூடாது, மீறி பயன்படுத்தினால், பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும். திடீரென ஆய்வு செய்யப்படும் என்று உத்தரவாதம் அளித்ததின் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.


இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட கடல் பகுதியில், அரசினால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி, கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருவதாக, மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில்,  உதவி இயக்குனர் சிவக்குமார் தலைமையில், மீன்வள ஆய்வாளர்கள் துரைராஜ், ஆனந்த், கடல் அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் நவநீதன், மீன்வள மேற்பார்வையாளர்கள் சண்முகசுந்தரம், சுரேஷ் ஆகியோர் மனோரா கடல் பகுதியில் இருந்து நாட்டுப்படகில் ஒரு குழுவாகவும், சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து ஒரு குழுவாகவும், இரண்டு குழுக்களாக பிரிந்து  கடலுக்குள் ஆய்வு பணி மேற்கொண்டனர்.




அப்போது, திருநீலகண்டன், மாரிமுத்து ஆகியோருக்கு சொந்தமான படகுகளில், அரசினால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி பயன்படுத்துவதற்கான உபகரணங்கள் இருந்ததை கண்டறிந்து ஆய்வுக்குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு பிடிக்கப்பட்ட ஆயிரத்து 50 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மீன்கள் ஏலம் விடப்பட்டு 16 ஆயிரத்து 800 அரசு கணக்கில் செலுத்தப்பட்டது. இதையடுத்து, '2 விசைப்படகுகள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மீனவர்கள் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தியதற்காக அபராத தொகையும், ஒரு மாதத்திற்கு விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிப்பதற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது' என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Temple Gold Monetisation: கோயில் நகைகளை தங்கக்கட்டிகளாக மாற்றும் திட்டம் - முதல்வர் தொடங்கி வைத்தார்