கும்பகோணத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி நிரஞ்சனா தேவி தேசிய அளவிலான சிலம்பு சுற்றில் தொடர் போட்டியில் நீண்ட நேரம் சிலம்பு சுற்றி சாதனை படைத்தார். அவருக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில், இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு மாணவியை பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத்,
கும்பகோணத்தை சேர்ந்த நிரஞ்சனா தேவி என்கிற மாணவி 6 மணி நேரம் தொடர்ந்து இடைவிடாமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார். அவரை இந்து மக்கள் கட்சி பாராட்டுகிறது. சிலம்பு போட்டியை மத்திய அரசு உலக விளையாட்டு போட்டிகளில் சேர்த்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது.
ராஜீவ் காந்தியை கொன்று புதைத்ததாக பேசிய சாட்டை துரைமுருகனை திமுக அரசு உடனடியாக கைது செய்துள்ளது. இதேபோன்ற சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பேச்சுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஏராளமான திமுகவினர் பேசியுள்ளனர். இது போன்று இல்லாமல் மேடை பேச்சு நாகரீகமான தாக இருக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் வேண்டுமென்றே திட்டமிட்டு சாதிரீதியான பதற்றத்தைத் தூண்டிவிட்டு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு பிரச்சனைகளை தூண்டி விடுகின்றனர். இவர்களை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு ஒடுக்க வேண்டும்.
வைகோ தொண்டர்களின் விருப்பத்தினை ஏற்று துரை வையாபுரியை மதிமுகவின் தலைவராக நியமித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது அடுத்த தலைவராக வளர்ந்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தை பேணுகிற சாதாரண தொண்டனும் தலைவராக வரமுடியும் என்கிற நிலை திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இல்லை.
திமுகவின் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பா.ஜனதா கட்சியின் தொண்டரை தாக்கிய வழக்கில் தேடப்படுகிறார். சுற்றுச்சூழல் ஆர்வலர் என்கிற போர்வையில் சுற்றித்திரியும் தர்மபுரி செந்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து மக்களுக்கு கிடைக்கக்கூடிய பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்காதபடி இடையூறாக இருந்து வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு என்னென்ன தேவைகள் உள்ளன என்பதை நாடாளுமன்றத்தில் தெரிவித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்கக் கூடிய வகையில் திமுக எம்பிக்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளனர். மத்திய மாநில அரசின் நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு கொண்டு உள்ளனர். இந்தப் போக்கு மாறவேண்டும்.
தமிழக முதலமைச்சர் மூன்று நாட்கள் கோவிலை அடைத்து வைக்க வேண்டும் என்கிற நடைமுறையை ரத்து செய்து நவராத்திரி காலங்களில் பொதுமக்கள் கோவில்கள் சென்று வழிபாடு செய்ய அனுமதி வழங்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் திமுக அரசுதான். பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரிவிதிப்பு கொண்டு வந்தால் 30 முதல் 40 வரை பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வராதபடி திமுக சதித்திட்டம் செய்து வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தமிழக மக்கள் அதிமுகவை தோற்கடித்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி இறைத்துக் கொண்டனர். பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்வுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுகவின் மக்கள் விரோத அரசு மட்டுமே.
கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி தங்கமாக டெபாசிட் செய்ய குழு அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தக் குழு அமைப் பதற்கான அதிகாரம் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கோ தமிழக அரசுக்கோ கிடையாது. இதுபோன்ற குழுக்களை அறங்காவலர்கள் மட்டுமே அமைக்க வேண்டும். பக்தர்களால் காணிக்கையாகச் செலுத்தப்படும் தங்க நகைகள் நீண்ட நாட்களாக பயன்பாடு இல்லாமல் உள்ள நிலையில் அவற்றை உருக்கி தங்கமாக முதலீடு செய்யும் நடைமுறை திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் இந்த நடைமுறைகளை கோவில் அறங்காவலர்கள் பக்தர்களும் உபயதாரர்கள் இணைந்து முடிவு செய்கின்றனர்.
தமிழகத்தில் இதுபோன்ற முடிவுகளை அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் இணைந்து எடுத்தால் அது பல்வேறு முறைகேடுகளுக்கும் ஊழலுக்கும் வழிவகுக்கும். எனவே தமிழக அரசு இந்த முடிவை கைவிட வேண்டும். கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். அறநிலையத் துறையும் அரசியல்வாதிகளும் கோவிலை விட்டு நீங்க வேண்டும். கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி தான் கோவில்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என்பது கிடையாது. தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு உபயதாரர்கள் மூலமாகவே திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
எந்தக் கோவிலும் பணப்பற்றாக்குறையால் தவிப்பது இல்லை. அனைத்துக் கோயில்களிலும் உபயதாரர்கள் சிறப்பான முறையில் திருப்பணிகளை செய்து கொடுக்கின்றனர். எனவே தங்கத்தை உருக்கி முதலீடு செய்ய வேண்டும் என்கிற திட்டம் தற்போது அவசியமில்லாத ஒன்று என்றார். அவருடன் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி, மாவட்டச் செயலாளர் அனபாயன், மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் மாநிலச் செயலாளர் சுவாமிநாதன் மாநில அமைப்புச் செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.