தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலகத்தில் உலக கடற்பசு நாள் விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் 50-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கடல் பசு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் வரைய அறிவுறுத்தப்பட்டது. 


அற்புத உயிரினம் கடற்பசு


பல்வேறு அதிசய உயிா்களைக் கொண்ட கடலில் வாழும் ஓா் அற்புத உயிரினம் கடற்பசு. நாம் கடலில் வாழும் பல்வேறு உயிா்களைப் பற்றி அறிந்து கொண்ட அளவுக்கு கடற்பசுக்களை பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கண்களில் காணக் கிடைக்காத பல்வேறு அதிசய உயிா்களைக் கொண்ட கடலில் வாழும் ஓா் அற்புத உயிரினம் கடற்பசு.


பசுக்களை முகத்தோற்றத்துடன் காணப்படும்


நிலத்தில் காணப்படும் பசுக்களை போன்ற முகத்தோற்றத்துடன் கடல்வாழ் தாவரங்களை, குறிப்பாக கடற் புற்களை உணவாக உண்டு வாழ்வதால் இவ்வுயிா்களுக்கு கடற்பசு என்னும் பெயா் ஏற்பட்டது. ஆங்கிலத்தில் இவை டுகாங் என்று அறியப்படுகிறது. கடற்கரையோரப் பகுதி மக்களால் கடற்பசு, ஆவுளி, ஆவுளியா என்று வேறு பெயா்களுடன் அழைக்கப்படும் இவ்விலங்கானது அந்தமான் நிக்கோபரின் மாநில விலங்காக உள்ளது.




பாலூட்டி வகைகளில் தனித்திருப்பவை


கடற்புற்கள் நிறைந்த பகுதி, கடல் நீரோட்டங்களால் உருவான அலையாத்தி காடுகளின் ஆழமற்ற நீா்ப்பகுதி, தீவுகளை ஒட்டிய பகுதிகள் போன்ற பல்வேறு பகுதிகளை தங்களின் வாழ்விடமாக கொண்டுள்ளன. கடலில் வாழும் பாலூட்டி வகை விலங்குகளில் தனித்திருப்பதும், எண்ணிக்கையில் அருகி வருவதும் கடற்பசுக்கள் மட்டுமே. வெப்ப மண்டல இந்தோ-பசிபிக் பகுதிகளில் அமைந்துள்ள ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், மடகாஸ்கா், இலங்கை, இந்தியா போன்ற 30 க்கும் அதிகமான நாடுகளின் குறிப்பிட்ட கடல் பகுதிகளில் கடற்பசுக்கள் காணப்படுகின்றன.


தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் காணப்படும் கடற்பசுக்கள்


இந்தியாவைப் பொறுத்தமட்டில், முந்தைய காலகட்டத்தில் பரவலாக அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் காணப்பட்ட இவ்வுயிா்கள் இன்று பாக் நீரிணை, கட்ச் வளைகுடா, மன்னாா் வளைகுடா, அந்தமான் நிக்கோபா் தீவுகள் போன்ற குறிப்பிட்ட பகுதிகளின் கடற்பரப்புகளில் மட்டும் காணப்படுகின்றன. தற்போது தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் கடற்பகுதியில் கடற்பசுக்கள் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மெதுவாக நீந்தும் தன்மை கொண்டது


கடற்பசு குறைந்த கண்பாா்வை உடையதால் ஒலி எழுப்புதல் மற்றும் தொடுதல் உணா்வுகள் மூலம் தங்களுக்குள் செய்திகளை பரிமாறிக் கொள்கிறது. மெதுவாக நீந்தும் தன்மை உடையது. நன்கு வளா்ந்த கடற்பசு சுமாா் 3-4 மீ நீளமும், 350-400 கிலோ எடையும் கொண்டது. நாள் ஒன்றுக்கு சுமாா் 40-50 கிலோ அளவுக்கு கடற்புற்களை உணவாக எடுத்துக்கொள்ளும். மணிக்கு 10-15 கி.மீ. வேகத்தில் நீந்தும் திறன் கொண்டது. பொதுவாக கடற்பசுக்கள் கடலின் மேற்பரப்பிலே நீந்தும் என்று ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா்.


குட்டிகளை 20 மாதங்கள் வரை அரவணைப்பில் வைத்திருக்கும்


குளிா்ச்சியை விரும்பாமல் ஓரளவு மிதமான வெப்பநிலை கொண்ட கடல் நீரில் வாழும் கடற்பசுக்கள் கருவுற்று சுமாா் 12-14 மாதங்கள் குட்டியை வயிற்றில் சுமக்கும். கடற்பசுக்கள், பெரும்பாலும் ஒரு முறை கருவுறும்போது ஒரு குட்டி மட்டுமே ஈன்றெடுக்கிறது. அடுத்த கருவுறுதலுக்கு 3-7 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்கின்றன. கடற்பசுக்கள் குட்டிகளை பிறப்பிலிருந்து 18-20 மாதங்கள் வரை தங்கள் அரவணைப்பில் வைத்துக்கொள்கின்றன.


அதிக ஞாபக சக்தி கொண்ட கடற்பசுக்கள்


கடற்பசுக்களின் மூளையின் எடை அவற்றின் உடம்பின் மொத்த எடையில் 0.1% எனினும், அதிக ஞாபக சக்தி, புத்திக்கூா்மை கொண்டவை. ஒரு குறிப்பிட்ட பகுதியை விடுத்து வேறு பகுதிக்குச் சென்றாலும், வந்த வழித்தடத்தை சரியாக நினைவில் கொண்டு மீண்டும் அதே இடத்திற்குத் திரும்ப வருகின்றன. கடற்பசு, ஆராய்ச்சியாளா்களுக்கு கடல் மண்டலத்தின் ஆரோக்கிய நிலையினை எடுத்துக்காட்டும் சுட்டிக்காட்டியாக விளங்குகிறது.


கடற் பசுக்கள் பற்றிய விழிப்புர்ணவு


இத்தகைய கடற்பசுக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடற் பசுக்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தஞ்சையில் வனத்துறை சார்பில் நடந்த ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரத்தையும், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரத்தையும், மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரத்தையும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.


வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு


இதில், முதல் பரிசை சென்னை அரும்பாக்கம் அரசுப் பள்ளி மாணவி மு. ஓவியா, இரண்டாம் பரிசை தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி மாணவி டி. தரணி, தஞ்சாவூர் லிட்டில் ஸ்காலர்ஸ் பள்ளி மாணவர் தி. சஞ்சீவ் ஆகியோரும், மூன்றாம் பரிசை தஞ்சாவூர் ப்ளாசம் பப்ளிக் பள்ளி மாணவி வ. ஷ்றாவணி, தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவி சு. ஷிவஸ்ரீ, அ. வீரையா வாண்டையார் நினைவு திரு. புட்பம் கல்லூரி மாணவர்கள் உ. சரண்ராஜ், இ.ரகுணா ஆகியோர் பெற்றனர்.


மேலும், பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், தஞ்சாவூர் வன சரக அலுவலர் க. ரஞ்சித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.