தஞ்சாவூர்: தஞ்சை அருகே திருமலை சமுத்திரம் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகத்தில் ஐந்தாண்டுகளில் 25 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்க பஜாஜ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.



ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, பொறியியல் மற்றும் டிப்ளமோ பட்டதாரிகள், இறுதியாண்டு மாணவர்களுக்கு வளர்ந்து வரும் பணியிட திறன்கள் குறித்து பயிற்றுவிப்பதற்காக பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி (BEST) மையத்தை நிறுவுவதற்காக சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் பஜாஜ் ஆட்டோஸ் வைஸ் பிரசிடெண்ட் சிஎஸ்ஆர், ஜி.சுதாகர் கூறுகையில், ”2026ம் ஆண்டுக்குள் உற்பத்தித் துறையில் 33 லட்சம் திறமையான பணியாளர்கள் தேவை என்று வாகன திறன் மேம்பாட்டு கவுன்சில் (ASDC) தீர்மானித்துள்ளது. ஆட்டோமொபைல் துறையில் TNSDC முக்கியமான பங்குதாரராக உள்ளது. மேலும் இந்தியாவில் 10 சிறந்த மையங்கள் அமைத்து சிறப்பான தொழில் பயிற்சினை வழங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.


சாஸ்த்ரா சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட துணைவேந்தர் டாக்டர் எஸ்.வைத்தியசுப்பிரமணியம் கூறுகையில், "சாஸ்த்ரா தனது திறன்களை சிறப்பாக பயன்படுத்தி ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு சாஸ்த்ராவில் உள்ள மையம் பத்தில் முதன்மையானதாக மாற்றப்படும். பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி (BEST) மையத்தில் ரூ.30 கோடிக்கு மேல் முதலீடு செய்வதால், மாணவர்களுக்கு அதிநவீனமான மற்றும் விவேகமான பயிற்சிச் சூழல் வழங்கப்படும்" என்றார்.





பஜாஜ் ஆட்டோமொபைல் சார்பாக பஜாஜ் ஆட்டோ நிறுவன சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் திறன் பிரிவு தலைவர் ரமேஷ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மேலும் சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய பட்டதாரிகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களை பற்றியும் அவர் விளக்கினார்.

சாஸ்த்ரா - பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி (BEST) மூன்றாவது மையம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இம்மையம் இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்கள் உட்பட 20 புகழ்பெற்ற விற்பனையாளர்களிடமிருந்து வாங்கப்பட்ட 160 க்கும் மேற்பட்ட மேம்பட்ட பயிற்சி வசதிகளை உள்ளடக்கியது. மெக்கடிரானிக்ஸ், சென்சார்கள் & கன்ட்ரோல், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் மற்றும் தொழில்துறை 4.0, மேம்பட்ட உற்பத்தி ஆகிய நான்கு வளர்ந்து வரும் பகுதிகளில் பயிற்சி வழங்கப்படும்.

ஒவ்வொரு மையமும் குறைந்தது 500 மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் 25 ஆயிரம் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் உருவாக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழக முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன் கூறுகையில், "இந்த மையத்தில் 2 ஆண்டுகளுக்குள் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து சேர்க்கப்படுவர். மேலும், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் சேர்ந்து பயிற்சி பெறலாம். இந்த மையம் 2024, ஜனவரி மாதம் அமைக்கப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் சேர்க்கை தொடங்கப்படும்" என்றார்.  நிகழ்ச்சியில் பஜாஜ் ஆட்டோ நிறுவன மதிப்பீட்டு பிரிவு மேலாளர் சினேகா கோன்ஜ், கோட்ட மேலாளர் விஜய் வாவேரே மற்றும் சாஸ்த்ரா பல்கலைக்கழக டீன்கள் மற்றும் அசோசியேட் டீன்கள் கலந்து கொண்டனர்.