திருமணம் தாண்டிய உறவில் பிறந்து, 10 மாதமே ஆன பெண் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்ற தாய். தாய் உள்ளிட்ட மூன்று பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது ? குழந்தையை விற்க என்ன காரணம் ?
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஆவூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி வயது 35.இவரது கணவர் செல்வம் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் சுகந்தி அதே பகுதியைச் சேர்ந்த சமீதா பானு என்பவரது வீட்டில் வாடகைக்கு இருந்து வந்துள்ளார்.சுகந்திக்கு 14 வயதில் ஆண் குழந்தையும் 13 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.இந்த நிலையில் ஆவூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான திருமணமாகாத இளைஞருக்கும் சுகந்திக்கும் திருமணத்தை தாண்டிய உறவு இருந்து வந்துள்ளது.
மேலும் இந்த உறவின் காரணமாக சுகந்திக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.இந்த நிலையில் சுகந்தியின் வீட்டு உரிமையாளரான சமீதா பானு அந்த குழந்தையை 15 வருடங்களாக குழந்தை இல்லாத தனக்கு தெரிந்த நபருக்கு விற்று கொடுப்பதாகவும் அதற்கு ஒரு லட்ச ரூபாய் பணம் தருவதாகவும் சுகந்தியிடம் கூறியுள்ளார்.இதனையடுத்து சுகந்தி பிறந்து பத்து மாதமே ஆன அந்த பெண் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு சமீதா பானுவிடம் விற்பனை செய்துள்ளனர்.
குழந்தையை விற்றதை அறிந்த பொதுமக்கள் - புகார்
இதனையடுத்து சமீதா பானு நாச்சியார் கோயில் பகுதியைச் சேர்ந்த ஆயிஷா நஷீமா என்பவருக்கு அந்த குழந்தையை கொடுத்துள்ளார். இந்த நிலையில் குழந்தை விற்கப்பட்டதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 1098 என்கிற சைல்டு ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவித்ததையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தியதுடன் இது குறித்து வலங்கைமான் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்
இந்த புகாரின் அடிப்படையில் வலங்கைமான் காவல் நிலையத்தில் சுகந்தி சமீதா பானு மற்றும் ஆயிஷா நஷிமா ஆகியோர் மீது இளஞ்சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.திருமணம் தாண்டிய உறவில் பிறந்த 10 மாதமே ஆன பெண் குழந்தையை பெற்ற தாயே ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.