தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸ் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கம் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ஏ.கலியபெருமாள் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முனியம்மாள், ஆனந்தராஜ், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை ஏஐடியுசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு உள்ளாட்சி பணியாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் தர்ம. கருணாநிதி ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஒரு மாத போனஸ் வழங்க வேண்டும், வருங்கால வைப்பு நிதி அனைவருக்கும் முறையாக செலுத்தி அதற்கான கணக்கு ரசீது வழங்க வேண்டும், இ எஸ் ஐ அட்டை வழங்க வேண்டும்.
பயோமெட்ரிக் வருகை பதிவு என்ற பெயரில் தொழிலாளர்களை அலைக்கழிப்பதை கைவிட வேண்டும், ஒப்பந்தத்தாரர் ஒப்பந்த விதிகளை மீறி செயல்படுத்துவதால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் நாளை 16ம் தேதி முதல் மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதில் ஏஐடியுசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், ஏஐடியுசி உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் தி.திருநாவுக்கரசு, அரசு போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி. முத்துக்குமரன்,ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் எஸ்.கருணாநிதி, காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் ஆர்.பழனியப்பன் மற்றும் தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கட்டுமானத்திற்கு என்று அரசு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். கட்டுமான பொருட்களுக்கு தமிழக முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மூவேந்தர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் தலைமை தபால் அலுவலகம் அருகில் நடைபெற்றது.
கட்டுமான தொழிலாளர்களின் வீட்டு மனை உழவுகளுக்கு வீடு கட்ட வேண்டிய ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என்ற திட்டத்தை உடன் அமல்படுத்த வேண்டும். கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். கட்டுமான பொருட்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுமானத்திற்கு என்று அரசு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். கட்டுமான பணிகளுக்கு எம் சாண்ட், ப்ளீஸ் அண்ட் போன்றவற்றை தவிர்த்து மணல் குவாரியை திறக்கவும் அதை அரசை ஏற்று நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பிழை பல கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைமை நிலைய பேச்சாளர் கோவிந்தராஜன் வரவேற்றார். அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்து கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். மாநிலத் தலைவர் ரகுபதி, துணைத் தலைவர் கருப்பையா, பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் இருதயராஜ், ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், தென்மண்டல தலைவர் வியனரசு மற்றும் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தலைமை நிலைய பேச்சாளர் தங்கராசு நன்றி கூறினார்.
பின்னர் தென்மண்டல தலைவர் வியனரசு நிருபர்களிடம் கூறுகையில், தற்பொழுது எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கொடுக்கும் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் போராட்டம் தொடரும் என்றார்.