தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரையில் மீன்பிடித்த போது முதலை கடித்து மீனவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரை அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி என்பவரின் மகன் சிவப்பிரகாசம் (48). இவர் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிப்பார். பின்னர் அந்த மீன்களை அங்கேயே வியாபாரம் செய்து வருகிறார்.

Continues below advertisement

இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் சிவப்பிரகாசம் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் தெர்மாகோவில் அமர்ந்து கொண்டு ஆற்றில் வலைவீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த பகுதிக்கு வந்த முதலை ஒன்று சிவப்பிரகாசத்தின் காலை கடித்து இழுத்துள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த சிவப்பிரகாசம் அலறி துடித்துள்ளார். பின்னர் சட்டென்று மற்றொரு காலால் முதலை தலையை உதைத்து அதன் பிடியிலிருந்து காலை விடுவித்துக் கொண்டு தட்டுத்தடுமாறி கரைக்கு வந்து சேர்ந்துள்ளார்.

முதலை கடித்தால் காலில் படுகாயம் அடைந்து ரத்தம் வெளியேறி உள்ளது. இதற்கிடையில் சிவப்பிரகாசத்தின் அலறல் சத்தம் கேட்டு அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மற்ற மீனவர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். தொடர்ந்து மற்ற மீனவர்கள் சிவப்பிரகாசத்தை மீட்டு, உடனடியாக 108 ஆம்புலனஸ் மூலம் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

முதலை கடித்ததில் காலில் உள்ள விரல்கள் பலத்த காயமடைந்துள்ளதால் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலைப்பிரதேசங்களில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகளால் அவ்வப்போது அப்பகுதி மக்கள் அவதிப்படுவதை போல், கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரைகளில் ஒட்டியுள்ள கிராமங்களில் அவ்வப்போது முதலை ஊருக்குள் புகுந்து மாடு, ஆடுகளை கடிப்பதோடு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. முதலை கடித்து ஒரு சிலர் உயிரிழந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் முக்கொம்பு காவிரியிலிருந்து பிரியும் கொள்ளிடம் ஆறு நாகை மாவட்டம் மகேந்திரபள்ளியில் சென்று வங்கக்கடலில் கலக்கிறது.

இந்த ஆறு தான் தஞ்சை மாவட்டத்தையும் அரியலூர், கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களையும் பிரிக்கும் எல்லைக்கோடாக உள்ளது. கொள்ளிடம் ஆறு தஞ்சாவூர் மாவட்டத்தின் வடகிழக்கு பகுதியில் ஓடிவரும் போது அங்கு ஒரு மணற்திட்டு உருவானது. இந்த பகுதி அணைக்கரை என அழைக்கப்பட்டது. மேற்கு பகுதியில் கொள்ளிடம் இரண்டாக பிரிந்து இரண்டரை கி.மீட்டர் தூரம் சென்று மீண்டும் ஒன்றாக இணைந்து கொள்ளிடம் செல்கிறது. இந்த ஆற்றின் நடுவே உருவான “அணைக்கரை” தீவு போல் காணப்படுகிறது. இந்த ஆற்றிலிருந்து வடக்குப் பகுதியில் வடவாறு பிரிந்து வீராணம் ஏரிக்கு செல்கிறது. கடலூர் மாவட்ட பாசனத்துக்கு முழுமையாக வடவாறும், வீராணமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அணைக்கரையில் தண்ணீரை பகிர்ந்து விநியோகம் செய்ய கீழணையை பிரிட்டிஷ் பொறியாளர் சர்ஆர்தர் காட்டன் என்பவர் கட்டினார். இந்த பகுதியில் தண்ணீர் பகிர்ந்து வழங்குவதால் ஆண்டு முழுவதும் அணைக்கரையில் தண்ணீர் தேங்கியிருக்கும். இங்கு தேங்கியுள்ள தண்ணீரில் ஏராளமான முதலைகள் வசித்து வருகிறது. இந்த முதலைகள் அவ்வப்போது தண்ணீரிலிருந்து வெளியே வந்த மணற்பரப்பில் ஓய்வெடுப்பதும், அப்படியே ஊருக்குள் புகுந்து விடுவதுமாக உள்ளது. அப்போது பிடிபடும் முதலைகளை கொள்ளிடம் ஆற்றில் வனத்துறையினர் விடுவது வழக்கம். இவ்வாறு அணைக்கரை ஆற்றில் உலா வரும் முதலைகளால் மக்கள் அச்சமைடைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.