சம்பா சிறப்பு தொகுப்பு திட்டத்தினை தொடங்கிட தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தஞ்சாவூருக்கு வரவேண்டும் என தஞ்சை மாவட்ட காவிரி டெல்டா பாதுகாப்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தஞ்சாவூர் மாவட்ட காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி தொடங்கும் முன் தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா மாவட்ட உழவர்கள் உழவுத் தொழிலை மேம்படுத்திட சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்து வந்த நிலையில் கடந்த 2018, 2019, 2020 ஆம் ஆண்டுகளில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயலலிதா ஆகியோரது அரசு, கொள்கைக்கு எதிராக மேற்கொண்ட குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தினை விவசாயிகளின் நலனுக்கு விரோதமாக நிறுத்திவிட்டது. இதனை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளோம்.
அதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டில் மீண்டும் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை விரிவுபடுத்தி அரசாணை வெளியீடு செய்துள்ளீர்கள். இந்த ஆண்டில் கொரோனா தொற்றால் இரண்டாவது அலையின் கடுமையான பாதிப்பினால், விவசாயிகள் கடுமையானபொருளாதார ரீதியில் மிகவும் பின் அடைந்துள்ளோம். கடந்த 2020ஆம் ஆண்டு குறுவை பயிர் மகசூல் பாதிப்பு, 2020ஆம் ஆண்டு சம்பா தாளடி பயிர்கள், நிவர் மற்றும் புரவி புயலை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், பெய்த பருவம் தவறிய மழையால் சம்பா. தாளடி மகசூல் இழப்பை சந்தித்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட எந்தவொரு மாவட்ட உழவர்களுக்கும் இதுவரை பயிர் மகசூல் பாதிப்பிற்கான இழப்பீடு தொகையை பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன.
மத்திய அரசும் நாள்தோறும் டீசல், பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கொரோனா தொற்று தாக்குதலினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டீசல், பெட்ரோல், வேளாண் இடுபொருட்கள், உழவு, நடவு அறுவடை இயந்திரங்கள் விலை உயர்வு, வேளாண் கருவிகள், உதிரி பாகங்களின் விலை உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவைகளை, தமிழகஅரசு கருத்திலும், கவனத்தில் கொண்டு தமிழக அரசு இந்த ஆண்டிற்கு சம்பா சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்து தமிழகத்தில் 2021-22ஆம் ஆண்டிற்கான வேளாண் உணவு உற்பத்திக்கான 125 லட்சம் மெட்ரிக் டன்னை எளிதாக அடைவதற்கு வழி காண வேண்டும்.
இந்த ஆண்டிற்கு 2017-2018 சிறப்பு நிதி ஒதுக்கீட்டை விட 70 சதவீத நிதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்து, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், இனியும் தாமதிக்காமல் உடனே அறிவிப்பு செய்வதோடு, அந்த அறிவிப்பை காவிரி டெல்டா மாவட்ட தலைநகரான தஞ்சாவூரில் தொடங்கி வைப்பதற்கு நேரில் வரவேண்டும். மேலும் 2021-2022 சம்பா சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் இயற்கை வேளாண்மை செய்யும் விளைவுகளுக்கு கொண்டிருப்பதுடன் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவிரி டெல்டா விவசாயிகள் மனுவில் தெரிவித்துள்ளனர்.