தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் புகையிலைப் பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்தபோது கடையின் உரிமையாளரான முதியவரை சப்- இன்ஸ்பெக்டர் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தஞ்சை எஸ்.பி. ஆஷிஷ் ராவத் உடனடி நடவடிக்கை எடுத்து சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் முக்கூட்டு சாலை பகுதியில்  பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் திருநாவுக்கரசு (65). இந்நிலையில் இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


இதன் பேரில் மதுக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், அந்த பெட்டிக்கடையைஆய்வு செய்ய சென்றுள்ளார். அப்போது கடையில் புகையிலைப் பொருட்கள் உள்ளதா என கடை உரிமையாளர் திருநாவுக்கரசிடம் கேட்க அவர் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.


உடனே எஸ்.ஐ. ஜீவானந்தம் ஹான்ஸ் பொருளை எடு என்று சொல்லி கடையின் உரிமையாளரை பளார் என்று அடித்துள்ளார்.  உடனே கடை உரிமையாளர் திருநாவுக்கரசு எஸ்ஐ ஜீவானந்தத்தின் காலில் விழுந்து கெஞ்சுவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரல் ஆகி வருகிறது.


வயதான முதியவரை எஸ்.ஐ. இவ்வாறு அடிப்பது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் பெரும் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் எஸ்.ஐ. ஜீவானந்தத்தை தஞ்சை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் தஞ்சை ஆயுதப்படை போலீசுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார்.


புகையிலைப் பொருட்கள் விற்பனை தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமைதான். இருப்பினும் முதியவரை இப்படி தாக்குவது என்பது சரியான செயல் அல்ல என்று மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.