தஞ்சாவூர்: தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். குறிப்பாக தஞ்சாவூர், மயிலாடுதுறை பகுதியிலிருந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதனால் தஞ்சை,மதுரை, செங்கோட்டை வழியாக மயிலாடுறையில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Continues below advertisement

கேரள மாநிலம் சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை சிறப்பாக இருக்கும். இதற்காகவே பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு சபரிமலை செல்வதும் வழக்கம். கார்த்திகை மாதம் 1-ம் தேதி முதல் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் நெல்லை, கன்னியாகுமரி, செங்கோட்டை, சென்னை, கோவை திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதேபோல் கேரள அரசு சார்பிலும் மண்டலம் வாரியாக பஸ்கள் இயக்கப்படும்.

அதே போல் ரெயில்வே துறை சார்பில் சிறப்பு வாராந்திர மற்றும் தினசரி ரெயில்கள் கேரள மாநிலத்திற்கு இயக்கப்படும். ஏற்கனவே தினமும் கேரள மாநிலத்திற்கு ரெயில்கள் இயக்கப்பட்டாலும் சபரிமலை சீசன் நேரத்தில் அனைத்து ரெயில்களும் நிரம்பி வழியும். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் பலருக்கும் இருக்கை கிடைப்பதில் சிரமம் உள்ளது. வெகுதூரம் பயணம் செய்ய வேண்டிய நிலையால் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் ரெயிலில் இருக்கை கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சிலர் பயண திட்டத்தை மாற்றி பஸ்களில் பயணம் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் அதிக செலவு ஏற்பட்டு பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Continues below advertisement

திருச்சி, விருத்தாசலம், மதுரை, நெல்லை வழியாக கேரள மாநிலத்திற்கு அனந்தபுரி விரைவு ரெயில், குருவாயூர் விரைவு ரெயில், கொல்லம் விரைவு ரெயில் உள்ளிட்ட விரைவு ரெயில்களும் மற்றும் மாநில எல்லைகளில் இருந்தும் இணைப்பு ரெயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 17-ந் தேதி சபரிமலை சீசன் தொடங்கியதால் அனைத்து ரெயில்களும், பஸ்களும் கூட்டமாக தான் செல்கின்றன.

இதனால் பஸ்கள், ரெயில்களில் போதி இருக்கைகள் கிடைப்பதில்லை. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் அனைத்தும் விழுப்புரம், அரியலூர், திருச்சி, கோவை, மதுரை, செங்கோட்டை, நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்கள் வழியாக இயக்கப்படுகிறது. ஆனால் தஞ்சை, கும்பகோணம் ,மயிலாடுதுறை வழியாக எந்த ரெயில்களும் கேரள மாநிலத்திற்கு இயக்கப்படவில்லை.

இதனால் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறையை சுற்றியுள்ள பகுதி மக்கள் திருச்சி, விழுப்புரம் சென்று அங்கிருந்து பயணம் செய்யவேண்டிய நிலை உள்ளது. இதனால் சில நேரங்களில் ரெயிலை தவற விடும் நிலை கூட ஏற்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து ஏற்கனவே தமிழக எல்லையான செங்கோட்டைக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. அந்த ரெயிலும் எப்போதும் கூட்டமாக தான் செல்கிறது.

இதனால் மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை, கும்பகோணம், மதுரை,செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். தென் மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு இதே வழித்தடத்தில் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை, மதுரை, செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.