தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

Continues below advertisement

முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோயிலாக விளங்கும் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமி மலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழும் திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை தலத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்று அழைக்கப்படுகிறார். அதனால்தான் இந்த ஊரின் பெயரும் சுவாமிமலை என்றே கூறப்படுகிறது.

Continues below advertisement

படைப்புத் தொழில் செய்து வந்ததால் பிரம்மனுக்கு ஆணவம் ஏற்பட்டது.  இதையறிந்த முருகன் பிரம்மனிடம், ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா?” என்று கேட்டார். ஆனால் பிரம்மனுக்கு பதில் தெரியாமல் திகைத்தார். இதனால் அவரைத் தலையில் குட்டி சிறையில் அடைத்தார் முருகன். சிவபெருமானே நேரில் வந்து கேட்டுக் கொண்டதற்குப் பின்னர்தான், பிரம்மனை விடுதலை செய்தார்.

அப்போது சிவபெருமான் முருகனிடம், பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?” என்று கேட்க நன்றாகத் தெரியுமே என்று முருகன் கூற, அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?” என்றார் ஈசன். “உரிய முறையில் கேட்டால் சொல்வேன்” என்று பதில் கூறினார் முருகன். அதன்படி சிவபெருமான் இத்தலத்தில், முருகனுக்கு சீடனாக தரையில் பவ்யமாக அமர்ந்தபடி, முருகனிடம் பிரணவத்திற்காக பொருளை உபதேசமாக பெற்றார். அன்று முதல் முருகன், ‘சுவாமிநாதன்’ என்றும், ‘பரமகுரு’ என்றும், ‘தகப்பன் சுவாமி’ என்றும் போற்றப்பட்டார்.

இக்கோயிலில் சுவாமிநாதன் கம்பீரமாக, நான்கரை அடி உயரமுள்ள திருவுருவத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலில் திருக்கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர் . தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுவாமி மலை சுவாமிநாத சுவாமியை காண நீண்ட வரிசையில் இன்று சுவாமி தரிசனம் செய்மனர் .

மேலும் உற்சவர் சண்முகர் சன்னதி முன் ஏராளமான மக்கள் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்தினர். மேலும் இன்று தேரோட்டம் நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று அரோகரா அரோகரா என பக்தி கோஷமிட்டு தேரின் வடத்தை பிடித்து இழுத்து மகிழ்ந்தனர்.