தஞ்சாவூர்: மாமியார், மருமகள்போல நான் உசத்தியா நீ உசத்தியான்னு போட்டி போட்டு விலை உயர்ந்த தக்காளியும், பூண்டும் சரசரவென்று விலை குறைந்து விட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூண்டும் போட்டியில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.


என்ன ஆட்டம் ஆடின... இப்ப பாரு என்பது போல் ஒரு நேரத்தில் கிடுகிடுவென்று ராக்கெட் வேகத்திற்கு விலை உச்சத்திற்கு போன தக்காளி இப்போது தஞ்சாவூர் உழவர் சந்தையில் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.16க்கு விற்பனை செய்யப்படுகிறது. உனக்கு சளைத்தவன் நான் இல்லை என்பது போல் ரூ.550 வரை விற்கப்பட்ட பூண்டு இப்போது ரூ.225லிருந்து ரூ.250க்கு விலை குறைந்துள்ளது.


தமிழ்நாட்டில் சமையல் கூடங்களில் மிகவும் பாதுகாப்புடன் வைக்கப்பட வேண்டிய பொருளாகவே தக்காளி மாறியது சில மாதத்திற்கு முன்பு என்றால், நானும் அப்படிதான் என்று லாக்கரில் வைக்காத குறையாக பூண்டுக்கும் அவ்வளவு பாதுகாப்பு. காரணம் விலை உயர்வு. கிலோ ரூ. 30லிருந்து 50 வரை விற்ற தக்காளியின் விலை உச்சத்தை தொட்டது. கிலோ ரூபாய் நூறிலிருந்து நூற்று முப்பது வரை விற்கப்பட்டது. இதனால் வீடுகளில் தக்காளி பயன்பாடு குறைந்தது. அதேபோல் ஓட்டல்களிலும் தக்காளி கொண்டு செய்யப்படும் உணவு வகைகளான தக்காளி சாதம், தக்காளி சட்னி, காரத்தொக்கு உள்ளிட்டவை தவிர்க்கப்பட்டது.




தமிழர்களின் உணவில் புளிப்பு சுவை சேர்க்க புளிக்கு மாற்றாக பயன்படுத்த தொடங்கிய தக்காளி கொஞ்சம்கொஞ்சமாக தமிழ்நாட்டு மக்களின் உணவுக் கூடங்களில் பிரிக்க முடியாத ஒரு பொருளாக மாறிவிட்டது. இதனால், தக்காளி இல்லாமல் சமையல் எப்படி? என்கிற அளவுக்கு உணவில் முக்கிய இடம் பிடித்துவிட்ட தக்காளியின் விலை திடீரென உயர்ந்தது. விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனையானது. கொஞ்சம் கொஞ்சமாக ரூ.200 வரை சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி விலை உச்சத்தை தொட்டது.


தொடர்ச்சியாக சில வாரங்கள் தக்காளி விலை உயர்ந்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர். இப்படி குடும்பத்தலைவிகளை அவதிக்குள்ளாக்கிய தக்காளி விலை ஏறுமுகத்திலிருந்து இறங்கு முகமானது. இந்நிலையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் மையப் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் கிலோ ரூ.16க்கு தக்காளி விலை குறைந்து விற்பனையாகிறது. இந்த சந்தைக்கு திருவையாறு, கண்டியூர், நடுக்காவேரி, பள்ளிஅக்ரஹாரம், மருங்குளம், கண்டிதம்பட்டு, வேங்கராயன்குடிகாடு, கொல்லாங்கரை, வல்லுண்டான்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை கொண்டு வந்து அதனை விற்பனை செய்து வருகின்றனர்.


உழவர் சந்தைக்கு தினசரி காய்கறிகள் 15 டன் முதல் 17 டன் வரை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் உழவர் சந்தையில் காய்கறிகள் விலை சரிந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.54க்கு விற்ற கத்தரிக்காய் நேற்று ரூ.44-க்கும், ரூ.42-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.34-க்கும். ரூ.50-க்கு விற்ற  அவரைக்காய் ரூ.34-க்கும், முருங்கைக்காய் ரூ.50-க்கும், சின்ன வெங்காயம் ரூ.30-க்கும், ரூ.20-க்கு விற்ற தக்காளி ரூ.16-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் பல்வேறு காய்கறிகளின் விலையும் குறைந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் காய்கறிகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.


இதேபோல் தஞ்சாவூருக்கு வடமாநிலங்களில் இருந்து விற்பனைக்காக பூண்டு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தஞ்சாவூருக்கு பூண்டு வரத்து குறைந்தது.  இதனால் தொடர்ந்து விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. கடந்த மாதம் தொடக்கத்தில் நாட்டு பூண்டு கிலோ ரூ.420 முதல் ரூ.480 வரை விற்பனையானது. சைனா பூண்டு வரத்து இல்லை. பின்னர் வரத்து குறைய குறைய அதன் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது.


கடந்த வாரம் வரை பூண்டு வரத்து அதிகம் குறைந்திருந்தது. இதனால் பூண்டு விலை ஒரு கிலோ ரூ.600 வரை விற்பனையானது. ஆனால் தற்போது வரத்து அதிகரிக்க தொடங்கியதால் நாட்டு பூண்டு ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் லோடு ஆட்டோ மூலம் பூண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.