மாற்றுத்தினாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் சி.ராஜன், மாநகரத் தலைவர் கே.மோகன் முன்னிலை வகித்தனர். மாநகர துணைத் தலைவர் பி.சங்கிலிமுத்து, மாவட்ட பொருளாளர் எஸ்.சிவப்ரியா, மாவட்ட துணைச் செயலாளர் பி.கிருஷ்டி,  தஞ்சாவூர் ஒன்றியப் பொருளாளர் ராதிகா, மாநகர துணைச் செயலாளர் சிவபிரசாத் உள்ளிட்ட 50 பேர் கலந்து கொண்டனர்.போராட்டத்தின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 1000 இருந்து உயர்த்தி 3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றவர்களுக்கு 5 ஆயிரம், மாதாந்திர உதவித் தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும்.




மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையாக அண்டை மாநிலமான புதுச்சேரியில் 3,800 ரூபாயும், தெலுங்கானாவில் 3,016 ரூபாயும் வழங்கப்படுவது போல், தமிழகத்திலும் உயர்த்தி வழங்க வேண்டும் என கண்டன கோஷங்களிட்டனர்.தொடர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களில் 28 பெண்கள் உள்பட 50 பேரை போலீஸார் கைது செய்தனர். இதே போல் பட்டுக்கோட்டை, கும்பகோணம், ஒரத்தநாடு, திருப்பனந்தாள்,திருவோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஆர்ப்பாட்டமும், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.




பின்னர் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் கூறுகையில், கடந்த ஆட்சி காலத்தில் மாற்றுத்திறனாளிகளான நாங்கள் போராட்டம் செய்த போது, எதிர் கட்சியாக இருந்த திமுக, எங்களின் போராட்டத்தை ஆதரித்து, ஆட்சிக்கு வந்தால், உதவித்தொகை உயர்த்தி தருவதாக வாக்குறுதி அளித்தார்கள்.  


ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்கள் ஆன நிலையில், உதவித்தொகையை உயர்த்தி தருவதற்கு தயாராக இல்லை. குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு முதல் 3016 ரூபாய் மாதந்தோறும் வழங்குகிறார்கள். 2019 ஆம் ஆண்டு முதல் ஆந்திரா மாநிலத்தில் 3,000 ரூபாய் வழங்குகிறார்கள், பாண்டிச்சேரியில் 3800 கொடுக்கின்றார்கள். தமிழ்நாட்டில் கடுமையான விதிமுறைகளை வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை மறுக்கப்படும் நிலை தான் இன்று வரை நடைபெறுகின்றது. இந்தாண்டு தொடக்கத்தி்ல் 13 லட்சம் மாற்றுத்திறாளிகள் உள்ள நிலையில்,  5 லட்சம்  20 ஆயிரம் மாற்றத்திறனாளிகளுக்கு மட்டும் தான் உதவித்தொகை கொடுத்துள்ளார்கள்.  ஆந்திரா மாநிலத்தில் இந்தாண்டு 6 ஆறரை லட்சம் பேருக்கு உதவித்தொகை கொடுத்துள்ளார்கள்.




தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்த பட்சம் 3,000 உதவித்தொகை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழக்தில் ஆளும் திமுக அரசின் முதல்வர் முக.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கையை செவிமடுக்க வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த உதவித்தொகையான 500 கூட கொடுக்க வில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகள் முதல் கட்டமாக சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக உதவித்தொகையை வழங்காவிட்டால், காலவரையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.