தஞ்சாவூர் மாநகராட்சி 3 வது வார்டு, கரந்தட்டான்குடியை அடுத்த சருக்கை சவேரியார் கோயில் தெருவில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள  அனைவரும் மிகவும் அடித்தட்டு மக்களாகவும்,கூலி தொழிலாளியாக உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தெருவில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல்கள்  அடைத்து கொண்டது. அப்போது மாநகராட்சி அலுவலர்களிடம் புகாரளித்தனர். அவர்கள் வந்து பார்த்து விட்டு, கடமைக்காக சீர் செய்து விட்டு சென்றனர. அதன் பின்னர் சில நாட்களில் மீண்டும் பாதாள சாக்கடை மேன்ஹோலில் அடைப்பு ஏற்பட்டு, தெருக்கள் முழுவதும் கழிவு நீராக ஒடியது. இது குறித்தும் அப்பகுதியினர் புகாரளித்தனர்.  தொடர்ந்து வலியுறுத்தியதால், மாநகராட்சி அலுவலர்கள், மோட்டாரை கொண்டு, மேன்ஹோலில் உள்ள கழிவு நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால்  முழுவதுமாக கழிவுகளை எடுப்பதற்குள், பணியில் இருந்த அலுவலர்களிடம், மற்றொரு இடத்தில் மேன்ஹோல் அடைத்து கொண்டுள்ளது. உடனடியாக மோட்டாரை எடுத்து வர  உத்தரவிட்டதால், கழிவு நீர் எடுப்பதை அப்படியே விட்டு விட்டு, மோட்டாரை எடுத்து சென்றனர்.




இதனால், கடந்த மூன்று மாதங்களாக தெருக்கள் முழுவதும் கழிவு நீர் ஆறாக ஒடியும்,தேங்கி நிற்கின்றது.  இது போன்ற அவல நிலையால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் நாளுக்கு நாள் அதிகமானதால், வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.  அசுத்தமாக வீசுவதால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால், முகத்தில் துணியை கட்டிகொண்டு சென்று வருகின்றார்கள். இதனால் ஆத்திரப்பட்ட பொது மக்கள் சுமார் நுாற்றுக்கும் மேற்பட்டோர், சருக்கை சவேரியார் கோயில் தெரு, தஞ்சாவூர்-கும்பகோணம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிழக்கு காவல் நிலையத்தில் இருந்து இரண்டு போலீசார் பேச்சு வார்த்தை அழைத்தனர். ஆனால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உயரதிகாரிகள் வரவேண்டும், உடனடியாக கழிவு நீரை அகற்ற வேண்டும், நிரந்தரமான நடவடிக்கையை ஏற்படுத்தி தரவேண்டும் என கோஷமிட்டபடி, மரங்களை வெட்டி சாலையில் போட்டு மறித்தனர். மறியல் போராட்டத்தினால் இருபுறங்களிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தேங்கி நின்றன. அதன் பின்னர், டிஎஸ்பி கபிலன், இன்ஸ்பெர்டர் ரவிமதி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு போராட்டக்காரர்கள்,  முதலில் எங்கள் தெருவை பார்வையிட வேண்டும், துர்நாற்றம் வீசி, வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு காய்ச்சல் மற்றும் சரும நோய்களளால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கழிவு நீரை அகற்ற வேண்டும், நிரந்தரமான நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கோஷமிட்டனர்.




அப்போது, டிஎஸ்பி கபிலன், தெருவை பார்வையிட்டு, இப்பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றிய பின் செல்கிறேன், நிரந்தரமான நடவடிக்கை எடுக்கின்றேன் என்று உறுதி மொழி கொடுத்ததின் பேரில், மறியல் போராட்டத்தை பொது மக்கள் வாபஸ் பெற்றனர். இதனால் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் சுமார் 1 மணி  நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  இது குறித்து திமுக நிர்வாகி கூறுகையில், இந்த தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் அடைத்து கழிவு நீர் ஆறாக மூன்று மாதங்களாக ஒடுகிறது என்று பல முறை புகாரளித்தும்,  ஆணையர் கண்டு கொள்ளவில்லை என்றார்.