நெல்லையில் பள்ளி ஒன்றியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் இறந்ததன்  எதிரொலியாக, தமிழகம் முழுவதும் பள்ளிகளின் கட்டடங்களை ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். கும்பகோணத்தில் மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




அப்போது ஆயிரக்கணக்கானோர் தங்கள் கோரிக்கையை மனுக்களாக அமைச்சரிடம் வழங்கினர். அப்போது, கும்பகோணம் பகுதியில் வசிக்கும் திருநங்கை ஒருவர், நாங்கள் 30 க்கும் மேற்பட்டோர் கும்பகோணம் தொகுதியில் வசித்து வருகின்றோம். எங்களுக்கு வசிப்பதற்கு வீடு கொடுக்க மறுக்கின்றார்கள், இதனால் தினந்தோறும் அவதிப்பட்டு வருகின்றோம். எனவே, எங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கண்ணீருடன் தெரிவித்தார்.




இதே போல் கூட்டம் அதிகமானதால், தனது கோரிக்கையை வழங்க வந்த மூதாட்டி, கூட்டம் அதிகமாக இருந்ததால், அமைச்சரை சந்தித்து, மனு வழங்க கூட்டத்திற்குள் நுழைந்தார். கூட்ட நெரிசலில் மூச்சிறைத்து மயக்கமடைந்து கீழே விழுந்தார். அதிஷ்டவசமாக கூட்டத்தில் இருந்தவர்கள் கவனித்து மூதாட்டியை துாக்கியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்ட  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பின்னர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் சுமார் 2,700 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்குள் இருக்கும்  சுகாதார வளாகத்துக்குள் சென்ற 6 மாணவர்கள் சென்றுள்ளனர். அப்போது கழிவறை சுவர் இடிந்து விழுந்து, மூன்று மாணவர்கள் இறந்துள்ளனர். மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.


உடனடியாக முதல்வர் அலுவலகத்துக்கு இந்த  தகவலை கொடுத்துள்ளோம். ஆய்வு செய்யவும், விசாரணை நடத்தவும் பள்ளி கல்வி துறை உயரதிகாரிகளை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்டட பொறியாளர்கள், கட்டடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் கட்டட உறுதித் தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த  மாதம் சென்னையில் நடைபெற்ற முதன்மை கல்வி மாவட்ட அலுவலர்கள் கூட்டத்தில், எங்கு எல்லாம் கட்டடங்கள் சேதமாக இருக்கின்றதோ, அங்கு எல்லாம் அந்த பள்ளி கட்டிடத்துக்குள் குழந்தைகளை அனுமதிக்கூடாது என்று கண்டிப்பாக கூறியுள்ளோம்.   அதன்படி தான் செயல்பட்டு வருகின்றார்கள்.


இது அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். திருநெல்வேலியில் நிகழ்ந்த சம்பவம் துரதிஷ்டவசமானது.  இது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். முதல்வர் என்ன அறிவுறுத்துகின்றாரோ, என்ன நிவாரணம்  வழங்க வேண்டும் என்று சொல்கிறாரோ, அரசின் ஆணையை ஏற்று செய்து தரப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதிவாரியாக மக்களிடம், அவர்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெறப்பட்டு வருகிறது. இதுவரை  மாவட்டத்தில் 35 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்றார்.