எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் தொகுப்பு வீடுகள். உயிருக்கு பயந்து வாழும் பொதுமக்கள்.

 

தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் தொகுப்பு வீடுகள் பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டித் தரப்பட்டன. இந்நிலையில் அப்பொழுது கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் இதுவரை பல இடங்களில் சீரமைத்து தரப்படாமலும் மாற்று வீடுகள் கட்டித்தராத காரணத்தினாலும் குடியிருப்புவாசிகள் அனைவரும் உயிருக்கு பயந்து இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர்.

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சேகல் கோட்டகம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இந்திராகாந்தி நினைவு தொகுப்பு வீடுகள் ஆதிதிராவிட மக்களுக்காக கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அன்றைய காலகட்டத்தில் 36 ஆயிரம் மதிப்பில் 32 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 37 ஆண்டுகள் கழித்தும் இதுவரை அரசு சார்பில் சீரமைப்பு பணியோ புதிய வீடுகளோ கட்டி தரப்படவில்லை.



 

இடிந்து பாழடைந்து வீடுகளுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் வீடுகளின் மேற்கூரைகள் சிமென்ட்  பலகைகள் இன்றி இரும்புக் கம்பிகள் மட்டுமே காட்சி அளிக்கிறது. பலமுறை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து குழந்தைகள் மீது விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதாக பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் முதல் கிராம ஊராட்சி செயலர் வரை அனைவருக்கும் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் இப்பகுதி மக்கள்.



 

வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் வருகின்ற மழையில் இந்த வீடுகள் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பல வீடுகளில் மேற்கூரை இடிந்து விழுந்து உள்ளதால் கஜா புயலின் போது நிவாரணமாக வழங்கப்பட்ட தார்பாய்கள் மேற்கூரைகளாக மாறி காட்சியளிக்கின்றன. மேலும் இதே வீட்டில் தான் குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் வரை இருபத்தி நான்கு மணி நேரமும் வசித்து வருகின்றனர். எந்த நேரத்தில் இடிந்து விழுமோ  நாங்கள் உயிரோடு இருப்போமா என்ற அச்சத்தோடு ஒவ்வொரு நொடியையும் கடந்து செல்வதாக வேதனையுடன் இப்பகுதி மக்கள்  கூறுகின்றனர்.



மாவட்ட ஆட்சியர் முதல் அமைச்சர்கள் வரை எங்கள் பகுதிக்கு வரும்பொழுது தொடர்ந்து அவர்களிடம் எங்களுடைய குறைகளை கூறி வருகிறோம். அவர்களும் உடனடியாக உங்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்து செல்கிறார்களே தவிர இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எங்கள் பகுதி மக்களின் நிலையை கருத்தில் கொண்டு பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய மாற்று வீடுகள் கட்டித்தர வேண்டும் அல்லது தங்களது வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் வேதனை குரலாக உள்ளது. இதுகுறித்து அரசு அலுவலரிடம் கேட்டபோது விரைவிலேயே அந்த பகுதியில் சென்று வீடுகளை ஆய்வு செய்து பழுது பார்க்க முடிந்த வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்குவதாக முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை இடித்து விட்டு வேறு அரசு திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டித் தர ஏற்பாடு செய்யப்படும் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.