தவில் மூலம் உலக சாதனை படைக்கும் மன்னார்குடியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி
தமிழகத்தின் பாரம்பரிய இசைக் கருவியான தவில் தனிப்பெருமை கொண்டது. மங்கல இசைக்கான மகத்துவத்தை தவிலும், நாதஸ்வரமும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. ராஜவாத்தியம் என்ற அந்தஸ்தை பெற்ற தவில், நாதஸ்வரம் உள்ளிட்டவைகளை வயதில் பெரியவர்கள் மட்டுமே வாசித்து வந்த நிலையில் தற்பொழுது சிறு குழந்தைகள் ஆரம்ப காலத்திலேயே இதற்கான பயிற்சிகளை பெற்று உலக சாதனை படைத்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த அமிர்தவர்ஷினி என்ற 15 வயது சிறுமி பல நாடுகளுக்குச் சென்று தவில் வாசித்து பல சான்றிதழ்களை வீட்டில் குவித்து வைத்துள்ளார். மேலும் இந்திய அளவிலும் பல மாநிலங்களுக்குச் சென்று தவில் வாசித்து அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார். பெரும்பாலும் ஆண்களே இசைத்துக் கொண்டிருக்கும் தவிலை 15 வயதே நிரம்பிய ஒரு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
அன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த மணிசங்கர் பிரபல நாதஸ்வர இசைக் கலைஞர்- இவர் தாயார் ஜெயந்தி திருவாரூரில் உள்ள அரசு இசைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சிறந்த வயலின் கலைஞர் மற்றும் வயலின் இசை குறித்து முனைவர் பட்டம் பெற்றவர். இத்தகைய இசை சங்கமத்தை பெற்றோராக கொண்ட அமிர்தவர்ஷினி, பலரையும் தாளம் போட வைக்கும் அமிர்தவர்ஷினி கூறியதாவது:
நான் மூன்று வயதிலிருந்து தவில் வாசிக்க தொடங்கி ஆறு வயதில் அரித்துவாரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் தவில் இசை அரங்கேற்ற செய்தேன். வித்வான்கள் ராமதாஸ், கலைமாமணி, கோவிலூர் கல்யாணசுந்தரம் ஆகியோருடன் பயின்று வருகிறேன். பெண்கள் நினைத்தால் கலெக்டர், என்ஜினீயர், விமான விஞ்ஞானி என பல துறைகளில் சாதிக்கலாம். ஆனால் பெண்கள் பெரும்பாலும் தமிழிசைக் கலைஞர்கள் ஆவதில்லை. நான் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு பெண்களும் இதில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறேன். அனைத்து பெண்களும் நம் பாரம்பரிய மிக்க இசையான தவிலை வாசிக்க முன்வர வேண்டும் என்றார்.
அமிர்தவர்ஷினியின் திறமையை உலகளவில் பாராட்டி வரும் நிலையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் நடந்த இசைக்கச்சேரியில் கலந்து கொண்டு வீடு முழுவதும் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களால் நிரம்பி உள்ளது என்று கூற வேண்டும் தவில் மூலம் சாதனை படைத்துள்ள அமிர்தவர்ஷினியை பல்வேறு தரப்பட்ட மக்களும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது