தஞ்சாவூரில் அதிகளவு கைவினைக் கலைஞர்கள் உள்ளதால், கைவினை பொருட்களின் ஏற்றுமதிக்கான வழிகாட்டு மையத்தை தஞ்சாவூரில் தொடங்க வேண்டும் என புவிசார் குறியீடு பொருட்களின் வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஏற்றுமதி பொருட்களின் கூட்டமைப்பு சார்பில், தஞ்சாவூரில் கைவினைப் பொருட்களின் சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி செய்தல் தொடர்பான கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு கூட்டமைப்பின் துணை இயக்குநர் செல்வநாயகி வரவேற்றார். உதவி இயக்குநர் பாக்கியவேல் தலைமை வகித்தார். கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா, முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், பூம்புகார் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஸ்ரீகண்டஸ்தபதி ஆகியோர் உரையாற்றினர்.
கருத்தரங்கில் புவிசார் குறியீடு பொருட்களின் வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி பேசுகையில், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 45 கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இந்த பொருட்களை வடிவமைக்கும் கைவினை கலைஞர்கள் அவசியம் புவிசார் குறியீடுக்கான சான்றிதழை பெற வேண்டும். அங்கீகாரம் பெற்ற கலைஞர்கள் தான் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்கு பதிவெண் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகத்தின் சான்று, இந்திய ஏற்றுமதி பொருட்களின் கூட்டமைப்பின் சான்றிதழ், புவிசார் குறியீடு பொருட்கள் உற்பத்திக்கான சான்றிதழை அவசியம் பெற வேண்டும்.தற்போது இணையதளத்தில் கைவினைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்கு பிரத்தியோகமாக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் நம்முடைய கைவினைப் பொருட்களை வாங்கி பயனடையும் நிலை ஏற்பட்டுள்ளதால், கைவினை கலைஞர்கள் இதனை நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, டிஜிட்டல் சந்தைப்படுத்துதலில் இணைந்து கொள்ள வேண்டும்.
தஞ்சாவூரில் அதிகளவு கைவினைக் கலைஞர்கள் உள்ளதால், கைவினைப் பொருட்களின் ஏற்றுமதிக்கான வழிகாட்டு மையத்தை தஞ்சாவூரில் தொடங்க வேண்டும். கைவினை கலைஞர்கள் சான்றுகளை பெற வேண்டுமானால், புதுச்சேரிக்கு செல்ல வேண்டியுள்ளது.மத்திய அரசின் கைவினைப் பொருட்களின் மேம்பாட்டு ஆணையம் புதுச்சேரியில் உள்ளதை தஞ்சாவூருக்கு மாற்ற வேண்டும். மத்திய அரசு கைவினை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கும் போது புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை பரிசாக வழங்கி, அப்பொருட்களுக்கு கூடுதல் மதிப்பை அளிக்க வேண்டும், தஞ்சையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மத்திய அரசு விருதுகளை வழங்கும் போது, தஞ்சையில் உள்ளவர்களுக்கு தான் வழங்க வேண்டும்.
வெளியூர்களில் தயாரித்து,தஞ்சை ஒவியம் என்று விற்பனை செய்கிறார்கள். அது போன்ற பொருட்களுக்கு தேசிய விருதோ மற்ற விருதோ வழங்க கூடாது என்றார்.கருத்தரங்கில் கைவினைப் பொருட்கள் வடிவமைப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டனர்.