நாகை மாவட்டம் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையில்  இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள உள்ளது தெற்குபனையூர் ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 15 கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாள மக்கள் வசித்து வருகின்றனர். இந்த 15 கிராம மக்களின் வசதிக்காக தெற்கு பனையூரில் ஒரு துவக்கப்பள்ளி, வல்லபவிநாயகர் கோட்டத்தில் ஒரு நடுநிலைப் பள்ளி  செயல்பட்டு வருகிறது. மேற்படிப்புக்காக நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 3 கிலோமீட்டர் தூரமுள்ள திருக்குவளைக்கு ஆற்றை கடந்து நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

 


 

இது மட்டுமல்லாமல் கிராம மக்கள்மருத்துவமனை கால்நடை மருத்துவமனை தாலுகா அலுவலகம் பதிவாளர் அலுவலகம் விவசாயத்திற்குத் தேவையான இடு பொருட்கள் என  அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக அவசர மருத்துவ தேவைக்காகவும் திருக்குவளை தான் செல்ல வேண்டும். இவர்களின் சிரமத்தை உணர்ந்து அரசு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளாற்றின் குறுக்கே 3 அடி அகலத்தில் 50 அடி நீளத்தில் கான்கிரீட் நடைபாலம் கட்டி கொடுத்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த பாலத்தை புதுப்பித்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் தற்போது இன்று இந்த பாலத்தின் நடுவே இரண்டு இடங்களில் இடிந்து விழுந்தது.பழுதடைந்த பாலத்தில் மற்ற பகுதிகளில் எந்நேரம் ஆற்றுக்குள் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் கிராம மக்கள் சார்பில் பாலத்தின் இருபுறமும் கருவேல முட்களை வெட்டிப்போட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.



 

இதனால் எவ்வித போக்கு வசதி இல்லாமல் உள்ள கிராம மக்கள் மற்றும் மாணவிகள் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றி நடந்து திருக்குவளை செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. புதிய பாலம் கட்டுவதற்கு தெற்குபனையூர் ஊராட்சி சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்தும் அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை என குற்றம் சாட்டும் இப்பகுதி மக்கள் உடனடியாக அவசர கால ஊர்தி மற்றும் தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வந்து செல்லும் அளவிற்கு புதிய பாலம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் கேட்டபோது நபார்டு திட்டம் மூலம் 2.80 கோடி உத்தேச திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு ஆணை பிறப்பித்ததும் உடனடியாக பாலம் கட்டுமான பணி தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.